This Article is From Dec 17, 2018

கலைஞரை நினைவில் கொண்டு பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

கலைஞரை நினைவில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் குரலை, மக்களின் எண்ணங்களை, மக்களுடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தி தற்போது இருக்கும் பாஜக அரசை எதிர்காலத்தில் அகற்றுவோம்

கலைஞரை நினைவில் கொண்டு பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

கலைஞரை நினைவில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் குரலை, மக்களின் எண்ணங்களை, மக்களுடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தி தற்போது இருக்கும் பாஜக அரசை எதிர்காலத்தில் அகற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரீனா கடற்கரைக்கு சென்று, அண்ணா நினைவிடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி,

நாம் ஒரு மிகப்பெரும் தமிழினத்தலைவன் அவர்களின் நினைவை போற்றுவதற்காக இங்கே கூடியுள்ளோம். கலைஞர் கருணாநிதி சாதாரணமான ஒரு அரசியல்வாதியல்ல, அவர் தமிழ் மக்களின் குரலாக, ஒளியாக இருந்தார். ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் இரண்டு பக்கம் இருக்கும். ஒன்று மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருக்கும். இன்னொன்ரு அவர்கள் தன் குரலை மக்களுக்காக பிரதிபலிப்பதாக இருக்கும்.

கலைஞர் அவர்களை நாம் இங்கு பெருமைப்படுத்துகிறோம். ஏனென்றால் கலைஞர் தமிழ் மக்களின் குரலாகவே வாழ்ந்தவர். அனைவரது நினைவிலும் ஏதாவதொரு வகையில் கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் முதல்முறை கலைஞர் வீட்டிற்கு சென்றபோது, பெரிய வீடாக இருக்கும், ஏராளமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்து வீட்டிற்குள் சென்றேன். ஆனால் வீட்டிற்கு சென்ற போது ஆச்சர்யப்பட்டேன். அவருடைய எளிமை, நேர்மை ஆகியவற்றை அவரது இல்லத்தில் அவரை சந்தித்த போது தெரிந்து கொண்டேன்.

நான் ஒரு இளைஞராக அவரை பார்த்தபோது, அவருடைய எளிமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இளைஞராக பெருமைப்பட்டேன். ஒரு இளம் அரசியல் தலைவராக அவரை சந்தித்த போது அது மிகப்பெரும் உந்துதலை தந்தது. நான் கலைஞர் அவர்களை சந்ததித்ததற்கு மட்டும் நன்றி கூறவில்லை. மிகப்பெரிய வழிகாட்டியை, பின்பற்றக்கூடிய தலைமையை அவர் எனக்கு காட்டிச்சென்றதாக நினைக்கிறேன்.

கலைஞரை மக்களின் குரலை பாதுகாப்பவராக, அரசியல் சட்டங்களை பாதுகாப்பவராக பார்த்தேன். இப்போது இருக்கும் அரசு தாங்கள் நினைக்கும் காரியத்தை நிறைவேற்றும் அரசாக இருக்கிறது. கோடான கோடி மக்களின் குரலை மதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது இந்த அரசு. மொழி, பண்பாடு, கலாசாரத்தை மதிக்காத அரசாக உள்ளது இந்த அரசு.

கலைஞரை நினைவில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் குரலை, மக்களின் எண்ணங்களை, மக்களுடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தி தற்போது இருக்கும் பாஜக அரசை எதிர்காலத்தில் அகற்றுவோம். இந்தியாவின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை அழிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற சுயமான அரசு அமைப்பை அழித்து ஒழிப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒன்றுபட உள்ளோம். எனக்கு இங்கே வந்தது பெருமைக்கூறிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் நான் கலைஞர் பற்றி பேசும் போது தமிழரின் வரலாற்றை, மொழியை, கலாச்சாரத்தை பற்றி பேசுவது போல் உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

.