This Article is From Sep 09, 2019

நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

கொலீஜியம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வந்த மூன்று நாட்களில் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வந்தன. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமனி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். 

இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது. 

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும், அவரது ராஜினாமா முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள கூடாது எனக்கோரிக்கை விடுத்தும் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.  

இதனிடையே, கொலீஜியம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

.