This Article is From Jun 12, 2018

அர்ஜென்டினா கொடி கலரில் வீட்டுக்கு வண்ணம்: கலக்கும் கொல்கத்தா மெஸ்ஸி ரசிகர்!

ரஷ்யாவில் நடக்கப் போகும் கால்பந்து உலக கோப்பை போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது

அர்ஜென்டினா கொடி கலரில் வீட்டுக்கு வண்ணம்: கலக்கும் கொல்கத்தா மெஸ்ஸி ரசிகர்!

வீட்டை அர்ஜென்டினா கொடி கலரில் வண்ணம் தீட்டியுள்ள பத்ரா

ஹைலைட்ஸ்

  • இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கப் போகிறது கால்பந்து உலக கோப்பை
  • அர்ஜென்டினா கால்பந்து அணி மெஸ்ஸி தலைமையில் களம் இறங்கப் போகிறது
  • அர்ஜென்டினா கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் எனப்படுகிறது
Kolkata:

ரஷ்யாவில் நடக்கப் போகும் கால்பந்து உலக கோப்பை போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது. இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸி ரசிகர், தனது வீட்டுக்கு அர்ஜென்டினா நாட்டின் கொடி கலரில் வண்ணம் பூசியுள்ளார். 

கொல்கத்தாவில் டீ கடை வைத்திருப்பவர் சிப் சங்கர் பத்ரா. 1986 ஆம் ஆண்டு, அர்ஜென்டினா கால்பந்து அணி, மாரடோனா தலைமையில் உலக கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது முதல் பத்ரா, மரோடானவின் தீவிர ரசிகர் ஆனார். இதனாலேயே, மாரடோனா விளையாடும் அணியான அர்ஜென்டினா பத்ராவுக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்போது மெஸ்ஸியையும் பிடித்துவிட்டதால், அவருக்கு அர்ஜென்டினா மீதுள்ள பாசம் தொடர்ந்து வருகிறது. 

 
kolkata football fan

அர்ஜென்டினா மீது தனது ஈடுபாடு குறித்து பேசும் பத்ரா, 'என்னைப் பொறுத்தவரை மெஸ்ஸி, மாரடோனாவின் நீட்சி என்று தான் கருதுகிறேன். மெஸ்ஸியை எனக்கும் என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆட்டம் முதல் அவரின் குணம் வரை அனைத்துக்கும் ரசிகன் நான்' என்று மெஸ்ஸி குறித்து நெகிழ்கிறார். 

தனது வீட்டுக்குக் கீழேயே டீ கடை ஒன்றை வைத்துள்ளார் பத்ரா. இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பைக்குச் சென்று அர்ஜென்டினா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் இந்ந டீ வியாபாரி. ஆனால், அவரால் எவ்வளவு முயன்றும் 60,000 ரூபாய் மட்டுமே சேமிக்க முடிந்தது. இந்தத் தொகை ரஷ்யாவுக்கு செல்ல பற்றாது என்பதால், தற்போது டிவி மூலமே உலக கோப்பை போட்டிகளைப் பார்க்க ஆயத்தம் ஆகி வருகிறார். 

இந்த மாதம் 24 ஆம் தேதி மெஸ்ஸியின் பிறந்த நாள் வரப் போகிறது. அதைக் கொண்டாடவும் பத்ராவின் குடும்பமே தயாராகி வருகிறது. அன்று மெஸ்ஸி உருவம் பொறித்த டி-ஷர்ட்கள் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்பாடு நடந்த வருகிறது. 'மெஸ்ஸி பிறந்த நாளுக்கு பெரிய கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்' என்று சிரிக்கிறார் பத்ரா.

'அர்ஜென்டினா, தான் விளையாடும் போட்டிகளில் ஜெயித்தால் அதை விட எனக்கு சந்தோஷம் தரும் விஷயம் எதுவுமே இல்லை' என்றார் பத்ரா நிறைவாக. 

.