This Article is From Nov 21, 2019

காயத்தை அலட்சியம் செய்த பள்ளி ஆசிரியை!! பாம்புக்கடியால் 10 வயது சிறுமி உயிரிழப்பு!

பாம்புக்கடியால் காயம் ஏற்பட்டதை மாணவிகள் ஆசிரியையிடம் கூறியுள்ளனர். ஆனால் அவரோ, கல் இடித்திருக்கும் அல்லது நகக்கீறலால் காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி சமாளித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி ஸ்நேகலதா

Wayanad:

ஆசிரியை ஒருவரின் அலட்சியத்தால் 10 வயது சிறுமியின் உயிர் பாம்புக் கடியால் பறிபோயுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பதேரி என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 5-ம் வகுப்பில் ஸ்நேகலதா என்ற மாணவி படித்து வந்தார்.

நேற்று ஸ்நேகலதா உள்ளிட்ட மாணவிகள் பள்ளியில் இருந்தபோது, அங்கிருந்த ஓட்டை வழியே வந்த பாம்பு ஒன்று அவரை கடித்திருக்கிறது. இதனால் காயம் அடைந்த அவர், இதுபற்றி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

.

v0pq5cn8

 

ஆனால் ஆசிரியையோ கல் இடித்திருக்கும் அல்லது நகக்கீறலால் காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி சமாளித்திருக்கிறார். நேரம் செல்லச் செல்ல ஸ்நேகலதாவின் உடல் நீலமாகமாறத் தொடங்கியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை, அவரை அழைத்துக் கொண்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சென்றபோது ஸ்நேகலதாவின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. இதையடுத்து வித்ரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஸ்நேகலதாவின் உயிர் பிரிந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். உண்மை கண்டறியப்பட்டால் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் ரவிந்திரநாத் தெரிவித்துள்ளார்.

.