This Article is From Jul 21, 2018

அணைகள் நிறைந்ததால், கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்!

காவிரி ஆற்றில் அமைந்திருக்கும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் நீர் அளவு, முழு கொள் அளவான 124.8 அடியை தொட்டது

Kodagu, Karnataka:

காவிரி ஆற்றில் அமைந்திருக்கும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் நீர் அளவு, முழு கொள் அளவான 124.8 அடியை தொட்டது. அதிகபட்சமாக, வினாடிக்கு 80,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடக மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் இருந்த கர்நாடக மக்கள், இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் மழையால் குதூகலத்தில் இருக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணை நிரம்பியுள்ளது. அணை நிரம்பும் போதெல்லாம், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முதலமைச்சர் நான்கு அணைகளிலும் பூஜை நடத்துவது வழக்கும். இந்த பூஜைக்கு பாகினி என்று பெயர்.

அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி நேற்று இந்த பூஜையை செய்தார். இது பற்றி பேசிய அவர் " இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லை. இருந்தபோதும் அண்டை மாநிலத்து சகோதர சகோதரிகள், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் கேட்டனர். தமிழகத்திலும் மழை இல்லை என்பதும் எனக்குத் தெரியும்" என்றார். 

மேலும் " இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. 15 - 20 நாட்களாக முழு வேகத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழநாட்டில், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்துள்ளனர். கடவுளின் கருணையால் இந்த ஆண்டு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இருந்த பிரச்சனை தீர்ந்தது." என்றார் நிம்மதியாக. 

.