This Article is From Aug 21, 2020

பிரச்சார மேடையில் ‘சித்தி’ என்று தமிழ் வார்த்தையை சொன்ன கமலா ஹாரிஸ்… நெகிழ்ச்சி சம்பவம்!

தன் உரையின்போது மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் பேசிய கமலா, ‘சித்தி’ என்கிற வார்த்தையை மட்டும் தமிழில் பேசினார். 

பிரச்சார மேடையில் ‘சித்தி’ என்று தமிழ் வார்த்தையை சொன்ன கமலா ஹாரிஸ்… நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழகத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவர் கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ்.

ஹைலைட்ஸ்

  • கமலா ஹாரிஸின் தாய் தமிழர் ஆவார்
  • அவரின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்
  • அவர், அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறாத். அவர் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை சில நாட்களுக்கு முன்னர் தேர்ந்தெடுத்தார். அதிலிருந்து அவருக்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் ஆதரவு குவிந்து வருகின்றது. 

அதற்கு காரணம் கமலாவின் தாயான ஷ்யாமலா கோபாலன், தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்து மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார் ஷ்யாமலா. அங்கு அவர் ஜமைக்காவைப் பூர்விகமாகக் கொண்ட கருப்பின ஆணைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பிறந்த பெண்தான் கமலா ஹாரிஸ். 

ஷ்யமாலாவின் தந்தையான பி.வி.கோபாலன், இந்தியக் குடிமைப் பணி செய்தவர். அவரின் சொந்த ஊர்தான் தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம் எனப்படுகிறது. இப்படி தமிழகத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்ட கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்ததை ஒப்புக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்படி அவர் பேசும்போது, தன் இன்றைய நிலைக்குப் பலருக்கும் நன்றி தெரிவித்தார். “எப்போதும் குடும்பம்தான் முதலில் இருக்க வேண்டும் எனக்கு மிக அழுத்தமாக சொல்லித் தரப்பட்டது. குடும்பம் என்றால், நீங்கள் பிறந்த குடும்பமும், நீங்கள் வாழத் தேர்வு செய்யும் குடும்பமும் அடக்கம்.

எனக்கு குடும்பம் என்றால், எனது கணவர், எனது இரண்டு வளர்ப்புப் பிள்ளைகள், என் சகோதரி, என் பெண் நண்பர்கள், என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட், என் godchildren” என சொல்லி முடித்து, “எனது குடும்பத்தில் என் மாமாக்கள், அத்தைகள் மற்றும் சித்திகளும் அடங்குவர்” என முடித்தார். 

தன் உரையின்போது மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் பேசிய கமலா, ‘சித்தி' என்கிற வார்த்தையை மட்டும் தமிழில் பேசினார். 

கமலா ஹாரிஸ், தன் கருப்பின வேர்களை மட்டும் அதிகம் பிரதிநிதப்படுத்துவதாகவும், இந்தியப் பாரம்பரியத்தை… குறிப்பாக தமிழ்ப் பாரம்பரியத்தை அந்தளவுக்கு வெளிக்காட்டுவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இப்படியான சூழலில்தான், பொதுப் பிரச்சார மேடையில், ‘சித்தி' என்கிற வார்த்தையைச் சொல்லிப் பலரை உருக வைத்துள்ளார் கமலா. 

பாராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த தமிழரான கவுதம் ராகவன், “உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் ‘சித்தி' என்றால் என்ன என்று கூகுளில் தேடிக் கொண்டுள்ளனர். ஆனால் கமலா ஹாரிஸ் அவர்களே, அது என்ன என்பது எங்களுக்குத் தெரியும்” என்று பதிவிட்டார். 

அதேபோல டிவி தொகுப்பாளர் பத்ம லக்‌ஷ்மி, “கமலா ஹாரிஸ், சித்தி என்று பேசியபோது என் கண்கள் கலங்கிவிட்டன. என் இதயம் முழுக்க இலகுவாக மாறிவிட்டது” என நெகிழ்ந்துள்ளார். 


 

.