This Article is From Aug 10, 2018

‘நீங்கள் மோடி ஆதரவாளரா..?’- கமலின் சூசக பதில்

‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ என ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார்

New Delhi:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், தான் ஒரு மோடி ஆதரவாளரா என்பது குறித்து கமல்ஹாசன் சூசக பதில் கூறியுள்ளார். 

கமல்ஹாசன், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது கட்சியை அதிகாரபூர்வமாக பதிவு செய்தார். தொடர்ந்து இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ என ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார். இந்நிலையில்தான் நாம் அவரிடம், கூட்டணி குறித்தும் மோடி குறித்தும் பேசினோம்.

அதற்கு அவர், ‘மோடி என்பது ஒரு தனி மனிதன். நான் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தான். ராகுல் காந்தியாக இருந்தாலும், ரஜினியாக இருந்தாலும் நான் அவர்களின் கொள்கையை வைத்துத்தான் மதிப்பிட முடியும். எனவே, நான் மோடிக்கு எதிரானவன் அல்ல. நான் நாட்டுக்கு ஆதரவானவன், வளர்ச்சிக்கு ஆதரவானவன்’ என்று பேசினார்.

அவர் தொடர்ந்து, ‘திராவிடக் கொள்கை என்பது சில கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பரந்துப்பட்டது. அது இந்திய தேசியத்துடன் ஒத்து செயல்படுவது என நம்புகிறேன்’ என்று கூறினார்.

மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து கமல், ‘வளர்ச்சிதான் எனக்கு அடித்தளம். எனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் வளர்ச்சி என்பது தான் முக்கியம். அதற்காகவே பாடுபடுவேன். என்னை விமர்சித்த எதிர்கட்சியினரைப் பற்றி மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நாம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி செல்ல வேண்டும்’ என்று பதிலளித்தார்.

.