This Article is From Oct 04, 2019

Little Child In Diapers: இந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை: கமல்ஹாசன்

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

Little Child In Diapers: இந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை: கமல்ஹாசன்

இந்தி திணிப்பிற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Chennai:

இந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். அப்போது இந்தி மொழி குறித்து பேசிய அவர்,

இந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடுகையில், இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான். இதை நான் ஏளனமாகக் கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதைத் திணிக்கக் கூடாது என்றார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில், ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, அமித்ஷா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் ஒரு விடியோ வெளியிட்டார். அதில், இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது.

அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும் என்று அவர் கூறியிருந்தார். 

(With inputs from ANI)

.