This Article is From Aug 08, 2018

கலைஞரின் மரணமும், நாகரீகம் மறந்த நெட்டிசன்களும்!

கருணாநிதி அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுதிலிருந்தே, அவரது வயது, உடல்நலம் மற்றும் மரணம் குறித்து மீம்ஸ்களும், பகடி காணொளிகளும் வந்தவண்ணம் இருந்தது

கலைஞரின் மரணமும், நாகரீகம் மறந்த நெட்டிசன்களும்!

10 நாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுதிலிருந்தே, அவரது வயது, உடல்நலம் மற்றும் மரணம் குறித்து மீம்ஸ்களும், பகடி காணொளிகளும் வந்தவண்ணம் இருந்தது. ‘Week Dayல செத்தா, 1 நாள் லீவு கிடைக்குமே’ என்பது போல பல வகையான மீம்கள். இன்று அவர் இறந்துவிட்டார் என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான பின்னும், அவரது மரணத்தை வைத்தும் கேலி கிண்டல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு முன்னணி தமிழ் யூட்யூப் சேனல் கூட, கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருப்பதை ஒரு கான்செப்ட்டாக வைத்து ஒரு நகைச்சுவை காணொளியை வெளியிட்டுள்ளது. ஒருவரது மரணத்தை வைத்து ‘லைக்ஸ்’ வாங்கி, பணம் சம்பாதிக்கும் அளவிற்கா இவர்களுக்கு கற்பனை வறட்சி வந்துவிட்டது? இவர்களது கிரியேட்டிவிட்டியை எல்லாம், இதில்தான் வாரி இறைக்க வேண்டுமா?

ஒரு மனிதரை எவ்வளவுதான் வெறுத்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் கூட அவரது மரணத்தை வைத்து நகைச்சுவை செய்வது என்ன மாதிரியான மனப்போக்கு? அரசியல் கொள்கை வேறுபாடு, சித்தாந்த முரண்கள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு மோசமான காழ்ப்புணர்ச்சி மட்டுமே இது.

அவரை ஏதோ தேசவிரோதியைப் போல பாவித்து, அவரது மரணத்தையும் கூட கொண்டாடுவதெல்லாம் அருவருக்கத்தக்கது.

இங்கே இப்படி கேலி, கிண்டல்கள் செய்வோர் எல்லோரும் இரண்டு வகையினர். ஒன்று – அரசியல் ரீதியான வன்மத்தை, இப்படி மீம்ஸ் வடிவில் கக்குபவர்கள் மற்றும் paid memes என சொல்லப்படும் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு மீம்ஸ் போடுபவர்கள். இரண்டு – ‘ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது. எல்லோரும் கலாய்க்கிறார்கள், நானும் கலாய்க்கிறேன்’ என கும்பலோடு கும்பலாக தொலைந்து போகிறவர்கள். இந்த இரண்டு வகையினருமே, சமூகத்திற்கு பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள்.

சமத்துவ கொள்கை, தமிழ் மொழியை செழுமைப்படுத்தியது, இந்தி எதிர்ப்பு கொள்கை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகள், தரமான சாலைகள் மற்றும் மேம்பால வசதிகள், தமிழ்நாட்டின் வியாபார மற்றும் தொழில்துறை கட்டமைப்பு என நம் மாநிலத்தை பல்வேறு தளத்தில் முதன்மை மாநிலமாக தலைநிமிர செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் கலைஞர்.

‘நானும் 30 வருஷமா, ஒரு நாள் லீவு கிடைக்கும்ன்னு காத்திருக்கேன். கட்டுமரம் கவிழமாட்டேங்குது’ என ஜோக்கடித்தவர்கள் எல்லோரும் நாளைய ஒரு நாள் அரசு விடுமுறையில் அப்படி என்னதான் செய்துமுடிக்கப் போகிறார்கள் என தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.

உங்கள் வீட்டில் யாரேனும் டைடல் பார்க்கிலோ அல்லது OMR சாலையில் சிப்காட், எல்காட் போன்ற ஏதேனும் ஐ.டி. பார்க்கிலோ, அல்லது ஒரகடம் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் உள்ள கார் கம்பெனிகளிலோ தயாரிப்பு நிறுவனங்களிலோ வேலை பார்த்தார்களே ஆனால், அதை எல்லாம் தொடங்கி வைத்து தமிழகத்தை பெரும் தொழில் நகரமாக்க முனைந்தவர் கலைஞர் கருணாநிதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவராகவோ அல்லது சிறுபான்மையினராகவோ இருந்தால், உங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவாக திட்டங்கள் வகுத்தவர் அவர்தான் என்பதையும் மறந்திடாதீர்கள்.

நீங்கள் எவ்வளவுதான் கலைஞர் அவர்களை வெறுத்தாலும், அவர் செய்த நன்மைகளை மறுத்தாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம், கத்திப்பாரா மேம்பாலம், டைடல் பார்க், சென்னை பல்முனை மருத்துவமனை (தலைமை செயலகம் ஆக இருந்திருக்க வேண்டியது), மெட்ரோ ரயில், அண்ணா நூலகம், தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் இருக்கும் மிக முக்கிய மேம்பாலங்கள், உழவர் சந்தை, சமத்துவபுர வீடுகள், குடிசைமாற்று வாரிய அடுக்குவீடுகள், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், அரசு கலைஞர் டிவி என ஏதோவொரு வடிவத்தில் உங்கள் வாழ்நாள் முழுக்க அவரது ஆட்சிக்கால பலன்களை அனுபவித்துக் கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள்!

 

 

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் எழுத்தாளரினுடைய சொந்த கருத்து. இது NDTV வினுடைய கருத்து அல்ல, எழுத்தாளருடைய கருத்து மட்டுமே. இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களுக்கும், கருத்துக்களுக்கும் NDTV எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

.