This Article is From Oct 09, 2018

நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ; அனுமதி மறுத்ததால் காட்டம்!

நக்கீரன் கோபாலை கைது செய்து வைத்திருக்கும் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு, அவரைப் பார்க்க சென்றார் மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ

நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ; அனுமதி மறுத்ததால் காட்டம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு எதிராக அவதூறான வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நக்கீரன் கோபாலை கைது செய்து வைத்திருக்கும் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு, அவரைப் பார்க்க சென்றார் மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ. ஆனால் அவருக்கு, நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கொடுக்கப்படாததை அடுத்து, காட்டமாக தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகம் காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சென்னையிலிருந்து புனேவுக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையில் ஆளுநர் குறித்து அவதூறான கருத்து இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நக்கீரன் இதழில் தான், கோபால் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் துறை, ஆளுநரை தரக்குறைவான வகையில் கோபால் கட்டுரையில் விமர்சித்துள்ளார் என்று கருத்து தெரிவத்துள்ளது.

கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘நான் நக்கீரன் கோபாலை சந்திக்க காவல் துறையிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், சுதந்திரமாக இயங்கும் பத்திரிகையாளர்கள் மீது உபயோகிக்கும் அடக்குமுறை இந்த கைதின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா நடக்கிறது? மாநில அரசு தான் இது குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.