This Article is From Apr 16, 2020

‘ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை? முதல்வரோடு மோதலா..?’- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!!

செய்தியாளர்கள், “ஏன் இத்தனை நாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. உங்களுக்கு முதல்வருக்கும் எதாவது பிரச்னையா?” என்று கேட்டனர்.

‘ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை? முதல்வரோடு மோதலா..?’- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!!

விஜயபாஸ்கர் சிரித்துக் கொண்டே...

ஹைலைட்ஸ்

  • வெகு நாட்களுக்குப் பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் விஜயபாஸ்கர்
  • கொரோனா குறித்தப் புள்ளிவிவரங்களை விஜயபாஸ்கர் கூறினார்
  • பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு வரை, கொரோனா குறித்தப் புள்ளி விவரங்களை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு வந்த விஜயபாஸ்கர், திடீரென்று அப்படிச் செய்வதை நிறுத்தினார். அவருக்கு பதில் சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ், புள்ளி விவரங்கள் மற்றும் தினசரி அப்டேட்களை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்து வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் நேற்று, செய்தியாளர்களை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார் விஜயபாஸ்கர். 

முதலில் செய்தியாளர்கள் மத்தியில் பேச ஆரம்பித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “இதுவரை 21,994 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 38 பேரில் 34 பேருக்கு நேரடி பாதிப்பு, 3 பேர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். மற்றொருவர் அரசு மருத்துவர் ஆவார்.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று 37 பேர் உள்பட மொத்தம் 117 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 26 ஆய்வகங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் குணம் அடைந்தோர் விகிதம் 9.5 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.1 சதவீதமாகவும் உள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், “ஏன் இத்தனை நாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. உங்களுக்கு முதல்வருக்கும் எதாவது பிரச்னையா?” என்று கேட்டனர். அதற்கு விஜயபாஸ்கர் சிரித்துக் கொண்டே, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நேற்று கூட நான் தண்டையார்ப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தேன். அதற்கு முந்தைய தினமும் சந்தித்தேன். மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க, நான் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். மேலும் பல பணிகளைச் செய்து வருகிறேன். இப்படிபட்ட நேரத்தில் முதல்வரின் வழிகாட்டுதல்படி, சுகாதாரத் துறை செயலாளரோ அல்லது தலைமைச் செயலாளரோ தினசரி கொரோனா அப்டேட்களை வழங்கி வருகின்றனர். தேவைப்பட்டால் நானும் இன்றைய தினம் போல் செய்தியாளர்களை சந்திப்பேன். இதுதான் காரணம். மற்றப்படி நீங்கள் நினைப்பது போல வேறு எந்த விஷயமும் இல்லை,” என்று விளக்கம் கொடுத்தார். 
 

.