This Article is From May 21, 2020

ஜூன் 1 முதல் பயணிகள் ரயில் சேவை: இன்று முதல் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்!

IRCTC Indian Railway: லாக்டவுன் போடப்படுவதற்கு முன்னர், ஒரு நாளைக்கு 12,000 ரயில்களை இயக்கி வந்தது ரயில்வே துறை.

IRCTC Tickets: மே 1 முதல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 366 ரயில்களை இயக்கியுள்ளது ரயில்வே துறை.

ஹைலைட்ஸ்

  • கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்
  • பயணிகள் முகவுரை அணிவது கட்டாயம்
  • பயணிகள் ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்வது கட்டாயம்
New Delhi:

வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மீண்டும் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணி முதல் அதற்கான டிக்கெட் முன்பதிவை துவக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது அதன் செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏசி மற்றும் ஏசி அல்லாத இரு பிரிவுகளுக்கும் டிக்கெட் புக்கிங் செய்யலாம். நேற்று, ஏசி அல்லாத ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்திருந்த நிலையில், ஏசி ரயில்களையும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக 30 நாட்களுக்கு முன்னதாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம். பயணத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பு வரையும் டிக்கெட் புக் செய்ய முடியும். பயணத்துக்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே பயணிகள், ரயில்வே நிலையத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயணம் செய்பவர்களின் சார்ட் போடப்பட்ட பின்னரும், பயணச்சீட்டு உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. 

அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவுக் கடைகள் திறந்திருக்கும் என்றும், பார்சல் மட்டுமே வாங்கிச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 1 ஆம் தேதி முதல், பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயில்வே துறை, சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்கிறது. மே 12 ஆம் தேதி முதல் முக்கிய நகரங்களை இணைக்கும் 30 ரயில்களை மட்டும் முதற்கட்டமாக இயக்க ஆரம்பித்தது ரயில்வே. இந்நிலையில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அப்போதிலிருந்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் 3வது முறையாக லாக்டவுன் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு கொடுத்துள்ளது மத்திய அரசு. அதைத் தொடர்ந்துதான் ரயில்களும் இயங்க ஆரம்பித்துள்ளன. 

ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்னர் அனைத்துப் பயணிகளிடமும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அந்தப் பயணிகளின் பயணம் ரத்து செய்யப்பட்டு, பயணச் சீட்டுக் கட்டணம் முழுவதும் மீண்டும் கொடுக்கப்பட்டுவிடும். ரயில் நிலையங்களுக்கு வரும் அனைவரும் முகவுரை அணிந்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியையும் தங்கள் மொபைல்களில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது ரயில்வே துறை. 

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 11 பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே, ஜமக்காலம், போர்வை உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது. 

லாக்டவுன் போடப்படுவதற்கு முன்னர், ஒரு நாளைக்கு 12,000 ரயில்களை இயக்கி வந்தது ரயில்வே துறை. மே 1 முதல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 366 ரயில்களை இயக்கியுள்ளது. 

.