This Article is From Jan 10, 2020

அதிபர் Trump ‘போர் பிரகடனம்’ செய்ய முடியாது..!?- Iran பதற்றம்; செக்வைத்த US House!

Iran Conflict: ஈரான், புதன்கிழமையன்று அமெரிக்க ராணுவப் படையினர் இருந்த ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

அதிபர் Trump ‘போர் பிரகடனம்’ செய்ய முடியாது..!?- Iran பதற்றம்; செக்வைத்த US House!

சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, காசெம் சுலைமானி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது.

Washington:

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்று எண்ணிய அமெரிக்க பிரதிநிகள் சபை (US House) உறுப்பினர்கள், ட்ரம்பின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்னர் ஈரான் தளபதியைக் கொல்ல ட்ரம்ப் உத்தரவிட்டு அது செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதலைத் தொடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி, அதிபர் ட்ரம்புக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 224 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 194 பேர் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர். ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையானோர், அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும், 3 பேர் எதிராக வாக்களித்தனர். 

செனட் சபையிலும் இதைப் போன்ற ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக 53 பேரும், ஜனநாயகக் கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். இதனால், அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுவது சிரமமாகவே இருக்கும். அந்த சபையிலும் தீர்மானம் நிறைவேறிவிட்டால், இரு சபையின்… அதாவது அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் ட்ரம்பால் போர் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. 

ஈரான், புதன்கிழமையன்று அமெரிக்க ராணுவப் படையினர் இருந்த ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, காசெம் சுலைமானி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் 15 ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஈரான் அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி, “ஈரான் தொடுத்த ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்கத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பகீர் கிளப்பும் தகவலைத் தெரிவித்துள்ளது. 

ஈராக் நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தினர் இருந்த தளத்தில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க தரப்பு சொல்கிறது. 

தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும் ஈரான், போர் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்துள்ளது என்று ஈரான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஈரானின் முன்னாள் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்தான தகவல்கள் வந்தவுடன், இறுதிச்சடங்கில் இருந்த பலர் சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்துள்ளனர். அந்த காட்சிகளை ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

இந்நிலையில் இந்த பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அனைத்தும் நலமாகவே இருக்கிறது,” என்றுள்ளார்.

.