This Article is From Nov 09, 2018

ஆப்கானில் தலிபான்களுடன் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா

ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதற்கு ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் சில நாடுகளை பங்கேற்குமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

இன்று ரஷ்யாவில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்

New Delhi:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் இந்தியா முதன் முறையாக பங்கேற்க உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும், தலிபான்களின் சில குழுக்கள் உள்நாட்டு சண்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஆப்கனில் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்யும் முயற்சியில் ரஷ்யா தற்போது ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாடுகளை அமைதி முயற்சியில் ஈடுபடுமாறு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ஆப்கானிஸ்தான் பிரச்னை தொடர்பாக ரஷ்யா முக்கிய கூட்டம் ஒன்றை நவம்பர் 9 (இன்று) நடத்துகிறது. இதில் இந்தியா பங்கேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியா சார்பாக ஆப்கானிஸ்தான் தூதராக இருந்த அமர்சிங், பாகிஸ்தானுக்கு தூதராக இருந்த டி.சி.ஏ. ராகவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கடந்த மாதம் டெல்லிக்கு ரஷ்ய அதிபர் புதின் வந்தார். அப்போது அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு இந்தியா ஒத்துழைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அப்கானிஸ்தான் அமைதி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

.