This Article is From Feb 21, 2020

ஆப்கான் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அஷ்ரப் கானிக்கு மத்திய அரசு வாழ்த்து!!

அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி 50.64 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்கான் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அஷ்ரப் கானிக்கு மத்திய அரசு வாழ்த்து!!

ஆப்கன் நாட்டின் ஒற்றுமைக்கு அஷ்ரப் கானி உழைப்பார் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

New Delhi:

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அஷ்ரப் கானிக்கு மத்திய அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம்தேதி அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிபராக இருக்கும் அஷ்ரப் கானி 50.64 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கான் நாட்டின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானிக்கு மத்திய அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ஜனநாயக நாட்டில் ஆப்கான் மக்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்தியா துணையாக இருக்கும். புதிய அரசுடன் இந்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்கா - தாலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தை ஆப்கானில் நடந்து வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டாத வகையில், 'இந்தியா - ஆப்கான் இரு தரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டும். வேண்டுமென்றே தூண்டி விடப்படும் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கும், ஆப்கான் நாட்டின் அமைதிக்கும் இந்தியா ஒத்துழைப்பு தரும்' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என்றும், வளர்ச்சிக்கும், அனைத்து குடிமக்களின் நலனுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

.