This Article is From Jul 02, 2018

சென்னை- சேலம் 8 வழிச் சாலை… நீளும் விவசாயிகளின் கதறல்!

சேலம் - சென்னைக்கு இடையில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது

சென்னை- சேலம் 8 வழிச் சாலை… நீளும் விவசாயிகளின் கதறல்!

ஹைலைட்ஸ்

  • சென்னை- சேலம் இடையே 277 கி.மீ-க்கு 8 வழிச் சாலை அமைய உள்ளது
  • இது மத்திய அரசின் திட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • இத்திடத்துக்கு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
Salem, Tamil Nadu:

சேலம் - சென்னைக்கு இடையில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், காடுகளும் அழிக்கப்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த 8 வழிச் சாலைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பிடமிருந்து பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

சென்னை - சேலம் 8 வழி அதிவிரைவுச் சாலை வரும் தடத்தில் 3 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் மோகன சுந்தரம். பல விவசாயிகளின் நிலங்கள் முழுவதுமாக காவு வாங்கப்படுவது போல, சுந்தரத்தின் 3 ஏக்கர் நிலமும் முழுவதுமாக இந்தத் திட்டத்தால் கையகப்படுத்தப்பட உள்ளது. ‘சென்னைக்கும் சேலத்துக்கும் இடையில் ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இந்த சாலைகளை ஏன் இவர்கள் விரிவுபடுத்த மறுக்கிறார்கள். எந்த மாதிரியான வளர்ச்சி குறித்து இவர்கள் பேசுகிறார்கள்? ஆயிரக்கணக்கான பசுமையான வயல்வெளிகளை தாரை வார்த்துவிட்டு எந்த வளர்ச்சி நோக்கி இவர்கள் போகப் போகிறார்கள்? டிராஃபிக் அதிகமாகிவிடும் என்று அரசு தரப்பு கவலைப்படுகிறதாம். உணவுத் தேவை அதிகரிக்குமே, அதற்கு என்ன மாற்று இருக்கிறது? தனது சொந்த மக்களையே இந்த அரசுகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன’ என்று அடுக்கடுக்கான கேள்விகள் அரசின் திட்டத்தைத் துளைத்து எடுக்கிறார் சுந்தரம்.

அவரின் நிலம் மட்டுமல்ல, ஏறக்குறைய 5,000 ஏக்கர் அளவிலான விவசாய  நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சென்னை - சேலம் 8 வழிச் சாலை, மத்திய அரசின் திட்டம். அதற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கையை எடுக்க முடியாது’ என்று கைவிரித்தார்.

இந்தக் கருத்தும் விவசாயிகள் மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘எடப்பாடி பழனிசாமி, தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் தான் எங்கள் முதலமைச்சர். எங்கள் நிலைமை குறித்து மத்திய அரசுக்கு அவர் தான் எடுத்துக் கூற வேண்டும். இது மக்களுக்கான அரசு, மக்களால் ஆன அரசு என்று அவர் அடிக்கடி சொல்வதற்கான அர்த்தம் என்ன. இப்படி ஒரு கருத்தை அவர் சொல்கிறார் என்றால், எதற்கு இந்தத் தேர்தல், ஆட்சியெல்லாம்?’ என்று கொதிப்புடன் வினவுகிறார் சேலத்தைச் சேர்ந்த விவசாயியான பரிமலா ராஜன். 

சாலை வரவுள்ள 277 கிலோ மீட்டருக்கும் இதைப் போன்ற விவசாயிகளின் ஓலம் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது. திருவண்ணாமலை மாவடத்தில் தான் இந்த சாலை அதிக தூரத்தில் போடப்பட உள்ளது. அம்மாவட்டத்தின் அனந்தசாயினம் என்ற விவசாயி, ‘நாங்கள் யாராவது இந்தத் திட்டம் வேண்டும் என்று கேட்டோமா? கார்பரேட்டுகளுக்கு உதவி செய்ய ஏன் எங்களை பலி கொடுக்கின்றனர்’ என்று படபடக்கிறார். 

கடந்த ஒரு வாரத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் உக்கிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏதுவாக இடம் அளக்க வரும் அரசு அதிகாரிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது, நிலத்தை அளக்கவிடாமல் செய்வது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

.