This Article is From Jul 05, 2018

‘விவசாயக் கடன்கள் ரத்து!’- கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

கர்நாடக மாநில விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி

ஹைலைட்ஸ்

  • மஜத தேர்தல் பிரசாரத்தின் போதே விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்றது
  • இன்று கர்நாடகா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது
  • மஜத- காங்கிரஸ் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது
Bengaluru:

கர்நாடக மாநில விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேர்தல் பிரச்சாரங்களின் போதே, ‘நான் ஆட்சி பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுவேன்’ என்று கூறி வந்தார் குமாரசாமி.

ஆனால், அவரது கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்காமல், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது. இந்நிலையில், இன்று கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் குமாரசாமி.

2 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்பட்ட விவசாயக் கடன்கள் இந்த அறிவிப்பு மூலம் ரத்து செய்யப்படும். இதனால், கர்நாடக அரசுக்கு 34,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மேலும், கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்திய விவசாயிகளின் செயலை போற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘எந்தெந்த விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினார்களோ, அந்தத் தொகை திரும்ப அவர்களுக்கே கொடுப்படும். அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை இதன் மூலம் திரும்ப கொடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இந்த கடன் தள்ளுபடி அறிவிப்புடன், பல்வேறு நிர்ப்பாசனத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் இருந்து 1.25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

அரசுக்கு ஆகப் போகும் இந்த கூடுதல் செலவினங்களை சமாளிக்க மினசார விலையை யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிக்கவும், எரிபொருளுக்கு அதிக விலை நிர்ணயிக்கவும் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் குமாரசாமி.

.