This Article is From Dec 30, 2018

‘அரசால் கூட எய்ட்ஸ் வரும், அதான் நாம் கற்றப் பாடம்!’- சீமான் பாய்ச்சல்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது

‘அரசால் கூட எய்ட்ஸ் வரும், அதான் நாம் கற்றப் பாடம்!’- சீமான் பாய்ச்சல்

சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரத்தம் தானம் செய்த இளைஞர் இன்று காலை இறந்துள்ளார். எச்.ஐ.வி பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது. இளைஞருக்கும், தனக்கு எச்.ஐ.வி இருந்தது குறித்து தெரிந்திருக்கவில்லை. விஷயம் தெரிந்தவுடன், இளைஞர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மற்றும் கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்த இளைஞர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை, கீழ்பாக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று வந்ததாக பரபரக்கப்பட்டது. இதை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் எடுத்த வரும் இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து இப்படி பகீர் கிளப்பும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளதால், பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஏதோ ஒரு இடத்தில் தவறு நடக்கிறது என்றால் அது விபத்து என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அடுத்தடுத்து ஒரே மாதிரி சம்பவங்கள் நடக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய தவறு. இது அரசின் மெத்தனத்தால், நிர்வாகச் சீர்கேட்டால், பொறுப்பற்றத்தனத்தால் நடந்த தவறு. அரசால் கூட, ஒருவருக்கு எய்ட்ஸ் வரும் என்பது தான் தமிழக அரசு, உலகிற்கு இன்று எடுத்துக் காட்டியுள்ளது. உலக அளவில் தமிழகத்திற்கு நடந்துள்ள ஒரு பெரிய கேவலம் இது' என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

.