சமூக வலைதளங்களில் திடீர் திடீரென்று சில வீடியோக்கள் வைரலாகிவிடும். அதில் எது உண்மை, எது பொய் என்று தெரிவதற்கு முன்னர் பலர் அதை தங்கள் பக்கங்களிலும் பகிர்ந்து விடுகின்றனர். அப்படித்தான் ட்விட்டர் தளத்தில், '@CaliaDomenico' என்ற பெயர் கொண்ட ஒருவர், ஒரு நீர்வீழ்ச்சியின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். ஒரு மலை முகடிலிருந்து நெருப்பு நீர்வீழ்ச்சிக் கொட்டுவது போல அந்த வீடியோவில் தெரிகிறது. இதுவரை அந்த வீடியோ 38 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த வீடியோ தொடர்பாக எழும் முக்கிய கேள்வி. அதில் வரும் நெருப்பு நீர்வீழ்ச்சி உண்மைதானா. நெருப்புதான் அப்படி கொட்டுகிறதா என்பதுதான். அதற்கு பதில் இல்லை. வீடியோவில் தெரிவது வெறுமனே, நீர்வீழ்ச்சி மட்டும்தான்.
யோஸ்மைட் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோதான் அது. ஏன் அப்படி நெருப்பைக் கொட்டுவது போல தெரிகிறது என்பதற்கு ஏபிசி செய்தி நிறுவனம், சூரியக் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நீர்வீழ்ச்சியில் பிரதிபலிக்கும் போது, இப்படிப்பட்ட ஒரு மாய பிம்பம் தெரியும். சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்டதால் நெருப்பு நீர்வீழ்ச்சி போல அது காட்சி அளிக்கிறது என்று விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த ‘நெருப்பு' நீர்வீழ்ச்சி வீடியோவைப் பலர் பகிர்ந்தும், பலர் ‘வாவ்' போட்டும் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இரண்டு வாரங்கள் மட்டும்தான், யோஸ்மைட் பூங்காவில் இப்படிப்பட்ட மாய நீர்வீழ்ச்சி தெரியுமாம்.