This Article is From Oct 31, 2019

உருவானது‘மகா’புயல்; கனமழை எச்சரிக்கை!! உஷார் நிலையில் தமிழகம்!!

மாலத்தீவுகள் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மதியம் இரண்டரை மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

உருவானது‘மகா’புயல்; கனமழை எச்சரிக்கை!! உஷார் நிலையில் தமிழகம்!!

லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘மகா' புயலாக உருவானது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதற்கு ‘'மகா'' என்று பெயரிடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள மகா புயலால் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்திலும், பெரம்பலூர், அரியலூர் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நேற்று காலை மாலத்தீவுகள் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மதியம் இரண்டரை மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று மாலை புயலாக வலுப்பெற்றுள்ளது.

இதற்கு மகா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போது மினிகாய் தீவு வடகிழக்கு 130 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திற்கு வடமேற்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் லட்சத்தீவு வழியாக கடந்து மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து  24 மணி நேரத்திற்கு மழை தொடரும்.  

கேரளா கடற்கரைப்பகுதி, கர்நாடக கடற்கரைப் பகுதி, லட்சத்தீவுகள் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இந்த பகுதியில் பலத்த காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். சில நேரங்களில் 85 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். இவ்வாறு அவர் கூறினார்.

எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா  மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 25 மாவட்டங்களில் மிக கன மழை மற்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக உஷார் படுத்தப்பட்டுள்ளது. 

.