This Article is From Nov 18, 2018

‘ஏன் அதிக பலாத்கார வழக்குகள் பதிவாகிறது தெரியுமா..?’- ஹரியானா முதல்வரின் திடுக் கருத்து

அதிக அளவு பலாத்கார வழக்குகள் பதிவாவதற்குக் காரணம், பெண்கள் அவர்களின் முன்னாள் காதலர்களை பழி தீர்க்க எண்ணுவதால் தான்

‘ஏன் அதிக பலாத்கார வழக்குகள் பதிவாகிறது தெரியுமா..?’- ஹரியானா முதல்வரின் திடுக் கருத்து

ஹரியானாவில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்கார சம்பவங்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றன

ஹைலைட்ஸ்

  • கட்டாரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது
  • கெஜ்ரிவால் கட்டாரைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
  • ஹரியானாவில் தொடர்ந்து பலாத்கார சம்பங்கள் அதிகரித்து வருவதாக தகவல்
Chandigarh:

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘அதிக அளவு பலாத்கார வழக்குகள் பதிவாவதற்குக் காரணம், பெண்கள் அவர்களின் முன்னாள் காதலர்களை பழி தீர்க்க எண்ணுவதால் தான்' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்கார சம்பவங்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றன. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது தான் கட்டார், ‘பாலியல் வல்லுறவுகள் முன்னரும் நடந்தன. இப்போதும் நடக்கின்றன. ஆனால், அது அதிகமாக தற்போது வெளியே வருகின்றன.

80 முதல் 90 சதவிகித பலாத்கார அல்லது பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் பரீட்சியமான இருவருக்கு இடையில் தான் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் பல நாட்கள் ஒன்றாக சுற்றுவர். ஒரு நாள் இருவருக்கும் இடையில் பிரச்னை எழும்போது, அந்தப் பெண் பலாத்கார வழக்கு பதிவு செய்வார்' என்று பதில் அளித்தார்.

இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படித்தான் வல்லுறவுகள் குறித்து சிந்திக்கிறார் என்றால், அங்கு பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள். ஹரியானா முதல்வர் பாலியல் பலாத்காரங்களுக்கு நியாயம் கற்பிக்கிறார். இதனால் தான் அம்மாநிலத்தில் தொடர்ந்து பலாத்காரங்கள் அதிகமாக நடக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்கள் சுதந்திரமாக சுற்றுகின்றனர்' என்று காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

2014 -15 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் பாலியல் வல்லுறவு வழக்குகள் 47 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை, அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கட்டாரின் இந்தக் கருத்து மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.


 

.