கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு அறிவித்தது
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவையும் முழு முடக்க உத்தரவினையும் பின்பற்றி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அலுவலகங்களையும் கடைகளையும் வார இறுதியில் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ட்வீட் இன்று செய்துள்ளார். வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என்றாலும், மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளன.
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் இரவு ஊரடங்குடன் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகின் மூன்றாவது மோசமான நாடான இந்தியா, கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை 21 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 17 நாட்களாக இந்தியா தினசரி அதிக கொரோன நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது, ஆனால் இறப்பு விகிதம் 1.89 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.