This Article is From Dec 03, 2018

ஆளுநர் பன்வாரிலால் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்: கி.வீரமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்: கி.வீரமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும் போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எடுத்துச்செல்லும் கட்டம் தான் இது.

அந்த 7 பேரும் நம் சகோதரர்கள், நம் சதைகள், நம்முடைய ரத்தங்கள், நம் உணர்வுகள், அவர்கள் தேவையில்லாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பற்றி எறியும் நேரத்தில் வீணை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

.