இந்தியாவின் வலதுசாரி இயக்கங்களின் முக்கிய ஆளுமையாக பார்க்கப்படுபவர் வீர சாவர்கர் (Veer Savarkar). அவர் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர பாஜக (BJP), அவருக்கு பாரத ரத்னா (Bharat Ratna) கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாஜக-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, “அரசு, வீர சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்துள்ளது நல்ல விஷயம்” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில பாஜக, தனது தேர்தல் அறிக்கையில், சாவர்கரை ஒரு தேசபக்தர் என்று சொல்லும் நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து ‘பிரிவினைவாதி' என்று கூறி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல, காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி வைத்து களத்தில் உள்ளது.
பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் காங்கிரஸுக்காக ராகுல் காந்தியும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.