This Article is From Aug 01, 2019

ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பல நாடுகளில் பேருந்துகள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2014 டிசம்பரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சியைச் சேர்ந்த வினோத் என்ற ரயில்வே காவலர், பெண் காவலர் ஒருவருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரயிலில் வந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் காவலர் வினோத் பேசியதாக, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் படி 2015-ல் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் உறுதி செய்தார். இதனை ரத்து செய்யக்கோரி வினோத் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருடன் பணியாற்றிய பெண் காவலரும், காவலர் வினோத் அன்று மது அருந்தி இருந்ததாகவும் பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். பல நாடுகளில் பேருந்துகள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

அது போன்ற கொள்கை தென்னக ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ரயில்களில் இரவு நேரங்களில் இது போன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொல்லைகள் எழுவதாக புகார்கள் எழுகின்றன என்று நீதிபதி வருத்தம் தெரிவித்து, வினோத் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தார்.  

மேலும், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து விரைவாக தென்னக ரயில்வே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

.