This Article is From Feb 03, 2020

சிஏஏ போராட்டம்: 3வது முறையாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!

Jamia Firing: கடந்த 4 நாட்களில் மட்டும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிஏஏ போராட்டம்: 3வது முறையாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!

Jamia Firing: பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்(File)

New Delhi:

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நேற்றிரவு பைக்கில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது கடந்த 4 நாட்களில் மட்டும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ஷாகின்பாக்கில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்தின் கேட் அருகே மாணவர்கள் கடந்த 2 மாதங்களாக டெண்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கேட் 5 அருகே உள்ள சிசிடிவி வீடியோக்களை கைப்பற்ற போலீசார் குழு சென்றுள்ளது. தொடர்ந்து, கடைக்கும் தகவல்கள் முதல்கட்ட தகவல் அறிக்கையில் சேர்க்கப்படும். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஜெகதிஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இரவு நேரத்தில் பல்கலைக்கழக கேட் அருகே சிறிய அளவிலே போராட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர். 

இதுதொடர்பாக வெளியாகியுள்ள மொபைல் வீடியோக்களில், துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டதும், போராட்டக்காரர்கள் மறைவான பகுதியை நோக்கி ஓடுகின்றனர். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான தோட்டக்களை தேடினர். எனினும், எந்தவொரு தோட்டாக்களும் கிடைக்கவில்லை. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காரில் வந்ததாக ஒரு சிலரும், இருசக்கர வாகனத்தில் வந்ததாக ஒரு சிலரும் கூறுகின்றனர். 

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டக்கார்களை நோக்கி வலதுசாரி இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஷாகின் பாக் பகுதியில் போலீஸ் தடுப்புகளுக்கு அருகே நின்றுகொண்டிருந்த மற்றொரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவரை போலீசார் பிடித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு ஆட்டோவில் அந்த பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் டெல்லி பிரச்சார பேரணியில் "துரோகிகளை சுடு" என்ற சர்ச்சைக்குரிய கோஷங்கள் முழக்கமிட்டதை அடுத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. 2020 பட்ஜெட்டில் சம்பந்தப்பட்ட குழுவின் ஒரு பகுதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக சாடியுள்ளார். இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. "எங்கள் டெல்லிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள், அமித் ஷா ஜி? பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன.. சட்டம் ஒழுங்கு தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. தேர்தல்கள் வரும், போகும், அரசியல் நடந்துகொண்டே இருக்கும், ஆனால் டெல்லி மக்களின் நலனுக்காக, தயவுசெய்து சட்டம் ஒழுங்கை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
 

.