This Article is From May 21, 2019

வாக்குப்பதிவு எந்திர சர்ச்சை! – முன்னாள் குடியரசு தலைவர் பிரணாபின் அறிக்கையால் பரபரப்பு!!

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இது தேசிய அளவில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

நாளை மறுதினம் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

New Delhi:

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியும் என ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் குடியரசு தலைவரும், முதுபெரும் அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பாஜக வெற்றியை வசப்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன. இதனை மறுத்த தேர்தல் ஆணையம், அப்படி முறைகேடு ஏதும் செய்ய முடியாதென தெரிவித்தது. இதன்பின்னர் எந்தக் கட்சி வேண்டுமானாலும், இந்த குற்றச்சாட்டை தொழில்நுட்ப ரீதியில் நிரூபிக்கட்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் வாக்கு மெஷினை தொடாமல் இதனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் இந்த விவகாரத்தில் சிக்கல் தொடர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல, அதன் உத்தரவுப்படி ஓப்புகை சீட்டு எனப்படும் விவிபாட் எந்திரங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்பு மக்களவை தொகுதி ஒன்றுக்கு ஒரு எந்திரம் மட்டுமே சரிபார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒன்றாக விவிபாட் எந்திரம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில அனைத்து விவிபாட் எந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டை நியாயப்படுத்துவதற்கு ஏற்ப, கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன என்று சில கட்சிகள் பிரச்னை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என ஏற்பட்டிருக்கும் சர்ச்சையை நான் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தை வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் இந்திய தேர்தல் ஆணையம்தான் முடித்து வைக்க வேண்டும்.

ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் எந்தவொரு சந்தேகத்திற்கும் இங்கு இடம் இருக்கக் கூடாது. மக்கள் அளித்த வாக்குகள் புனிதமானவை. அதன் மேல் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என எழுந்திருக்கும் சர்ச்சை, சந்தேகங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு பிரணாப் கூறியுள்ளார்.

.