This Article is From Nov 18, 2019

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது!

Winter session of parliament: முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாத குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய கூட்டத் தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தி, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றும் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

New Delhi:

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு - காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. 

இதேபோல், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், அம்மாநில விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாத குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய கூட்டத் தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தி, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றும் என்று கூறப்படுகிறது. இது, மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடராகவும் விளங்குகிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் 2-ஆவது கூட்டத் தொடராகும். முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா, தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. 

இதேபோல், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானமும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், பல்வேறு மசோதாக்களை பாஜகவால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. இதனிடையே, பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்து, எதிர்கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி வைக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. 

அத்துடன் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை (திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.

மேலும், மாநிலங்களவையில் மொத்தம் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, அவற்றில் ஒன்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்க்க வேண்டிய பட்டியலிடும் அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை 2019ல் திருத்தங்கள். 

முன்னதாக இம்மாத தொடக்கத்தில், காங்கிரசின் குலாம் நபி ஆசாத் கூறம்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் துயரம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறியிருந்தார். 
 

.