
விபத்துக்குள்ளான பேருந்தும், விபத்து நடந்த இடமும்.
துபாயில் நடந்த கோர விபத்தில் சிக்கி இந்தியர்கள் 12 பேர் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்து வந்த பேருந்து டிராபிக் சிக்னல் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'துபாயில் ஏற்பட்ட விபத்தில் துரதிருஷ்டவசமாக 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் போலீஸ் அளித்த தகவலின்படி, விபத்துக்குள்ளான பேருந்து ஓமனில் இருந்து துபாயை நோக்கி வந்துள்ளது. அதில் 31 பேர் இருந்திருக்கின்றனர். ஷேக் முகம்மது பின் சயீத் சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தபோது நேற்று மாலை 5.40-க்கு டிராபிக் சிக்னல் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Deeply grieved by the unfortunate bus accident in Dubai that has claimed 12 Indian lives. My sincere condolences to the families.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 7, 2019
Our Consulate @cgidubai is extending all help. https://t.co/wh2PV8sdMj
விபத்து ஏற்பட்ட இடம் மற்றும் விபத்துக்குள்ளான பேருந்தின் புகைப்படத்தை துபாய் போலீஸ் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. பஸ்ஸின் இடப்பக்கம் முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ராஜன் புதியபுராயில் கோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், ஜமாலுதீன் முகம்மதுன்னி, கிரன் ஜானி, ரோஷ்னி மூல்சந்த்னை, பிரபுலா மாதவன், தீபா குமார், வாசுதேவ் விஷாந்தாஸ், உமர் சோனோகதவாத், நபில் உம்மர் சோனோகதவாத், விமல் குமார் கார்த்திகேயன், விக்ரம் ஜவகர் தாகூர் ஆகிய 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து துபாய் போலீஸ் தலைவர் அப்துல்லா அல் மாரி கூறுகையில், 'சில நேரங்களில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு விடும். அதுதான் தற்போது நடந்திருக்கிறது. விபத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர்' என்றார்.