This Article is From Aug 15, 2018

கருணாநிதி மறைவுக்கு தலைநகர் டெல்லியிலும் நியூ ஜெர்சியிலும் தமிழர்கள் அஞ்சலி

தலைநகரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களால் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன

கருணாநிதி மறைவுக்கு தலைநகர் டெல்லியிலும் நியூ ஜெர்சியிலும் தமிழர்கள் அஞ்சலி

முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தமிழகமெங்கும் மக்கள் இரங்கல் தெரிவித்து கூட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திலும் மக்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைநகரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களால் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தில்லியிலுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் வாட்சப் வழியாக ஒருங்கிணைத்து கடந்த ஞாயிறு அன்று கருணாநிதிக்கு தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இரங்கற்கூட்டம் நடத்தினர். இதில் தில்லிப் பல்கலைக்கழக மாணவர்கள் முதலிய பல்வேறு தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டு மறைந்த முதுபெரும் தலைவரைப் பற்றிய தங்களது நினைவுகளை அனைவரோடும் பகிர்ந்துகொண்டனர். கருணாநிதியால் விளைந்த நன்மைகள், அவர் ஆற்றிய பணிகள், அவரிடம் தங்களுக்குப் பிடித்தவை பிடிக்காதவை எனப் பலவற்றையும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் பேசினர்.

இக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுள் ஒருவரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் கூறுகையில், “கருணாநிதி அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் மையமாக விளங்கியவர், முதல்வர் என்பதோடு அல்லாமல், அரசியலுக்கும் அப்பாற்பட்டு பல்வேறு துறைகளில் இயங்கியவர். தமிழுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்தவர். அதனால் இக்கூட்டத்துக்கு தில்லியிலுள்ள தமிழ் இளைஞர்களான நாங்கள் வாட்சப் வழியாக ஏற்பாடு செய்தோம். கருணாநிதிக்கு எதிரான அரசியல் சார்புநிலை கொண்ட பலரும் கூட இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மாற்றுப்பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பில் உள்ள பல்வேறு பிரிவினருக்கும் அவர் ஆற்றிய தொண்டு, கொண்டு வந்த திட்டங்கள், அளித்த அடையாளம் போன்றவை குறித்து இதில் கலந்துகொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்” என்று குறிப்பிட்டார்.

dq2t29n8

இதேபோன்று தில்லியிலுள்ள மற்றொரு பல்கலைக்கழகமான அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் History Society சார்பில் கடந்த பத்தாம் தேதியன்று Remembering Karunanidhi என்ற பெயரில் நினைவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ‘திராவிட, தேசிய அரசியலில் கருணாநிதி’ என்னும் தலைப்பில் ஆந்திராவைச் சேர்ந்த தில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் சுகுமார் பேசினார். அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ராஜன் கிருஷ்ணன் அவர்கள் ‘வரலாறு, ஜனநாயகம், கருணாநிதி’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் புது தில்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பல்கலை வளாகம் முழுக்க கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ‘தில்லித் தமிழ் மாணவர் படிப்பு வட்ட’த்தின் (DTSSC) அரசியல் பிரிவான Tamil Conscience என்னும் அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. “விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழக அரசியலில் கருணாநிதியின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று. அதனை இங்குள்ள மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் எடுத்துச் செல்ல விரும்பினோம். அந்த வகையிலே அவரது சாதனைகளில் மிக முக்கியமான, புரட்சிகரமான சிலவற்றைப் அவர் படத்துடன் பட்டியலிட்டு ‘திராவிடப் பெருந்தலைவர் விடைபெற்றார், நன்றி மு. கருணாநிதி’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டு ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகளாக ஒட்டியுள்ளோம்” என்று அவ்வமைப்பின் உறுப்பினர்களான கணேஷ்வரும் சிபி இலக்குவனிடம் நம்மிடம் தெரிவித்தனர்.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தினரும் கருணாநிதிக்கு அமெரிக்காவில் சில நாட்களுக்கு இரங்கல் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் அவர் தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்களை அமெரிக்காவிலும் எழுப்பி இரங்கல் தெரிவித்தார்.

.