This Article is From May 03, 2019

மேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல்: 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்த மம்தா!

மேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • புயல் பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
  • எச்சரிக்கையுடன் இருங்கள், 2 நாட்களுக்கு வெளியே வர வேண்டாம்
  • ஃபனி புயல் நாளை காலை மேற்குவங்கத்தை கடக்கிறது.
Kolkata:

கடலோர பகுதியான கார்க்பூரிலிருந்து புயல் பாதிப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா தீவிரமாக கண்காணித்து வருகிறார். அவர் இன்று மெதினிப்பூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஒடிசாவில் கரையை கடந்த புயல் மேற்குவங்கம் நோக்கி நகர்கிறது. மேற்குவங்கத்தை அடைந்த பின்னர் ஃபனி புயல் மெதுவாக வலுவிலக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், நாளை மேற்குவங்கத்தில் அதி தீவிரப்புயலாக கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜார்காண்ட் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்த நிலையில், அவரும் அதனை ரத்து செய்துள்ளார். இதேபோல், ஜாம்சேத்பூரில் உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார், அவரும் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

மேலும், ஃபனி புயல் தீவிரம் காரணமாக இன்று பிற்பகல் முதல் நாளை காலை வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், 233 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடலோர பகுதிகளில் கடற்படை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், இன்று ஒடிசாவில் புயல் கரையை கடந்த போது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில், மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்து பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது, மேலும், இந்த புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

.