This Article is From May 20, 2020

கனமழை, பலத்த கடல் சீற்றத்துடன், வங்கத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்! - வீடியோ

திங்கட்கிழமையன்று சூப்பர் புயலாக உருவெடுத்த ஆம்பன், அதிதீவிர சூறாவளி புயலாக வலுவிழந்துள்ளது, மேலும் திகாவில் உள்ள அதிகாரிகள் புயல் கரையை கடந்த பிறகுதான் அதன் தீவிரம் குறையும் என்று நம்புகின்றனர்.

ஆம்பன் புயல் கரையை கடுக்கும் போது, 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிகிறது. 

ஹைலைட்ஸ்

  • பலத்த கடல் சீற்றத்துடன், வங்கத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்
  • கரையை கடுக்கும் போது, 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிகிறது.
  • தொற்றுநோய் தீவிரத்திற்கு மத்தியில் ஏற்படும் முதல் புயல் பாதிப்பு
Kolkata:

மேற்கு வங்கத்தின் திகாவில் இன்று காலை பலத்த மழை மற்றும் கடல் சீற்றம் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள கடுமையான புயலான ஆம்பன், கடற்கரையை நோக்கி முன்னேறி வருகிறது.

திங்கட்கிழமையன்று சூப்பர் புயலாக உருவெடுத்த ஆம்பன், அதிதீவிர சூறாவளி புயலாக வலுவிழந்துள்ளது. மேலும் திகாவில் உள்ள அதிகாரிகள் புயல் கரையை கடந்த பிறகுதான் அதன் தீவிரம் குறையும் என்று நம்புகின்றனர்.

இதுதொடர்பாக திகா கடற்கரையில் இருந்து என்.டி.டி.விக்கு கிடைத்த தகவல்படி, பெரும் அலைகளுடன் காணப்படும் கடல் சீற்றம் நெருங்கி வரும் புயலின் அடையாளமாக உள்ளது. கிழக்கு மிட்னாபூரில் திகா உள்ளது. இது ஆம்பன் புயலால் நேரடியாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும்.

ஆம்பன் புயல் கரையை கடுக்கும் போது, 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியுள்ளதால், பெரும் சவால்களுக்கு மத்தியில் 50,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் தீவிரத்திற்கு மத்தியில் ஏற்படும் முதல் புயல் பாதிப்பு என்று இரட்டை சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

கடற்கரை நகரத்திலிருந்து ஐந்து மணி நேர தூரத்திற்குள் இருக்கும் கொல்கத்தாவிலும் காலையில் மழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வந்தன.

மேற்கு வங்கத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்கத்தா, ஹூக்லி, ஹவுரா, தெற்கு மற்றும் வடக்கு பர்கானாக்கள் மற்றும் கிழக்கு மிட்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான சேதங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
கொல்கத்தா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சந்தைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. 

புயல் வங்கம் வழியாக நகரும் போது, அங்கு பலத்து மழை மற்றும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கடற்படை, டைவிங் குழுவை அனுப்பி வைத்துள்ளது. 

.