This Article is From May 06, 2020

கோயம்பேடு சந்தை மூலமாக 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா! இடமாற்றப்படும் கோயம்பேடு சந்தை!!

“சென்னையை பொறுத்த அளவில், ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். வட சென்னை மிக நெரிசலான பகுதி. தெருக்களும், குடியிருப்புகளும் நெருக்கமாக உள்ளதால் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் பலர் பொது கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். மட்டுமல்லாமல் 25 சதவிகித மக்கள் முககவசம் பயன்படுத்துவதில்லை ஆகவே வட சென்னையில் அதிகப்பட்சமாக திரு.வி.க நகரில் தொற்று உள்ளது“

தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை இடமாற்றத்திற்கு தயாராகிறது

Chennai:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை இடமாற்றத்திற்கு தயாராகிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயபேடிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் 2,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 264 பேர் இதில் குணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, முன்னெப்போதும் இல்லாத அளவில் சென்னையில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையான கணிசமாக அதிகரித்தது. தமிழகத்தில் நேற்று 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 279 பேர்.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களாக 7,500 பேர் உள்ளனர். இதில் சந்தை வியாபாரிகள், மூட்டை தூக்குபவர்கள் என பலரும் அடங்குவர். இந்த சந்தையிலிருந்து கடலூர் திரும்பியவர் மூலமாக 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், விழுப்புரத்தில் 150 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

295 ஏக்கர் பரப்பளவில் 3,000 கடைகளோடு இயங்கி வரக்கூடிய சந்தையில் தற்போது 200க்கும் குறைவான கடைகளே செயல்பட்டு வருகின்றது. தற்போது இந்த சந்தையானது திருமழிசைக்கு மாற்றப்படுகிறது.

தற்போது கோயம்பேடு சந்தை மூடப்பட்ட பின்பு சந்தையுடன் தொடர்புடைய 7,500 பேரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்டவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி பிரகாஷ் NDTVக்கு தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த சந்தையானது பல மாநிலங்களுக்கு விவசாய பொருட்களை வழங்கும் இடமாகவும், விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்யும் இடமாகவும் இருக்கிறது. இந்த சந்தையோடு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. எனவே சந்தையை உடனடியாக மூட முடியவில்லை என்றும் பிரகாஷ் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இதற்கு தொடர்ச்சியான அதிக அளவிலான பரிசோதனைகளே காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. “நாங்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களை தொடர்ந்து தடம் அறிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதிக எண்ணிக்கையில் ஒரே பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் தொற்று மீட்பு விகிதமானது அதிகரித்துள்ளது.” என  தமிழக நிவாரண ஆணையரும் சென்னை கார்ப்பரேஷனின் சிறப்பு நோடல் அதிகாரியுமான டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் NDTVவிக்கு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“சென்னையைப் பொறுத்த அளவில், ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். வட சென்னை மிக நெரிசலான பகுதி. தெருக்களும், குடியிருப்புகளும் நெருக்கமாக உள்ளதால் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் பலர் பொது கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். மட்டுமல்லாமல் 25 சதவிகித மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவதில்லை. ஆகவே வட சென்னையில் அதிகப்பட்சமாக திரு.வி.க நகரில் தொற்று உள்ளது“ என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

.