This Article is From Apr 02, 2020

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு… 6 பேர் உயிரிழப்பு; - 10 தகவல்கள்!

கொரோனாவால் இதுவரை உலக அளவில் 43,000 பேர் இறந்துள்ளனர். 8.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு… 6 பேர் உயிரிழப்பு; - 10 தகவல்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவானது, தற்போது நடைமுறையில் உள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்திய அளவில் 1800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் புதன்கிழமையான நேற்று மட்டும் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை 41 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்றும், இதுவரை மொத்தமாக 144 பேர் கொரானாவிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

10 முக்கியத் தகவல்கள்: 

1.தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 160 பேருக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 234 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

2.டெல்லியின் நிஜாமுதீனில் கடந்த மாதம் நடந்த மத மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அவர்களில் 110 பேருக்கு நேற்று கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

3.மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் இறந்துள்ளதாகவும், 39 பேர் மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

4.மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில் அதிகபட்சமாக 55 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுவரை டெல்லியில் 152 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், 6 பேர் மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

5.ஆந்திரப் பிரதேசத்தில் 43 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். 

6.நேற்று உத்தரப் பிரதேச மற்றும் தெலங்கானாவில் இருவரும், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

7.மும்பையின் தாராவியைச் சேர்ந்த 54 வயது நபரும் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை உயிரிழந்தார். ஆனால், அவரின் இறப்பை அரசு இன்னும், தன் பட்டியலில் சேர்க்கவில்லை. 

8.இந்திய அளவில் 9 மாநிலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. உத்தரகாண்ட், கோவா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அந்தப் பட்டியலில் அடங்கும். 

9.பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவானது, தற்போது நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

10.கொரோனாவால் இதுவரை உலக அளவில் 43,000 பேர் இறந்துள்ளனர். 8.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

.