நேற்று பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இறந்துள்ளார்.
London: சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரும் மனித மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்கா, இத்தாலியைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் இந்த தொற்றால் மிக மோசமான பாதிப்பினை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இறந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட மிக இளவயது சிறுவனாக இவர் கருதப்பட்டார்.
இந்த நிலையில் பிரிட்டனைச் சார்ந்த 13 வயதான சிறுவன் இஸ்மாயில் முகமது அப்துல்வாஹாப் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் திங்கட் கிழமை இறந்திருக்கிறார்.
மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளின் அடிப்படையில் சிறுவனை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் அதையடுத்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற சிறுவன் மரணமடைந்துள்ளார் என்று குடும்ப நண்பர் மார்க் ஸ்டீபன்சன் கூறியிருக்கிறார்.
“வயதானவர்களை விட இளம் பருவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது என்பது குறைவான விகிதத்திலிருந்தாலும், இளம் பருவத்தினரை இந்த தொற்றானது பாதிக்காமல் கவனிப்பதற்கான விழிப்புணர்வை இந்த மரணம் உணர்த்துவதாக” கிங்ஸ் கல்லூரியின் விரிவுரையாளர் நத்தலி மெக்டெர்மொட் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரிட்டனில் இறப்பு 1789 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அந்நாட்டில் செவ்வாய்க்கிழமை மட்டும், 381 பேர் கொரோனா தொற்றால் இறந்திருக்கிறார்கள். இது முன்னெப்போதும் பதிவு செய்யப்படாத எண்ணிக்கையாகும்.