வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம்; கூட்டநெரிசலால் சர்ச்சை!

மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக, பிரக்யராஜில் உள்ள சிஏவி கல்லூரியில் ஒய்வெடுப்பதற்காக தங்கவைக்கப்பட்டிருந்தனர்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம்; கூட்டநெரிசலால் சர்ச்சை!

ஹைலைட்ஸ்

  • வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம்
  • நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்கள்
  • இரும்பு கதவுகளுக்கு பின்னால் இருந்த படி உணவு வழங்கி
Prayagraj:

உத்தரபிரதேசத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் போது, சமூக விலகலை கடைபிடித்து சரியான முறையில் வழங்காகததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் அந்த வீடியோவில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கல்லூரியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு அங்குள்ள இரும்பு கதவுகளுக்கு இடையே வாழைப்பழம், பிஸ்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை வரிசையில் நின்று பெறாமல், ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக கூட்டமாக கூடியபடி, கம்பிகளுக்கு இடையே கைகளை நுழைத்து உணவுகளை பெறுகின்றனர். 

இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவு விநியோகிக்காத நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக, பிரக்யராஜில் உள்ள சிஏவி கல்லூரியில் ஒய்வெடுப்பதற்காக தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உள்ளுர் நிர்வாகம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எனினும், அதனை விநியோகிக்கும் போது, சரியான முறையில் சமூக விலகலை கடைபிடித்து வழங்காமல், இரும்பு கதவுகளுக்கு பின்னால் இருந்த படி வழங்கியுள்ளனர். நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள் கலைப்பிலும், பசியிலும் இருந்ததால், அந்த உணவுகளை பெற ஒட்டுமொத்தமாக குவிந்துள்ளனர். 

இதுதொடர்பாக பிரயாக்ராஜ் அதிகாரி ஒருவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, அது தனிமைப்படுத்தல் மையம் அல்ல. மத்திய பிரதேசத்தில் இருந்து வருகை தந்த, தொழிலாளர்கள் ஒய்வெடுப்பதற்காக சிஏவி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது, அதனை பெறுவதில் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், நாங்கள் விநியோகத்தை உடனடியா நிறுத்திவிட்டோம். பின்னர் பேருந்துகளில் அவர்களது இருக்கையிலே அவர்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தொழிலாளர் ஒருவர் கூறும்போது, நான் போபாலில் இருந்து வருகிறேன். நான் ரேபரேலி செல்ல வேண்டும். எங்களுக்கான உணவுகள் சரியான முறையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. நாங்கள் வெளியே செல்லுவதற்கும் அனுமதி இல்லை. எங்களுக்கு இரவு உணவு வழங்கப்படவில்லை. தற்போது, பிஸ்கெட்டுகளும், பழங்களும் விநியோகிக்கப்படுகிறது. எனினும், தண்ணீர் என்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது என்றார். 

கடந்த வாரம், ஆக்ராவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் டீ, பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை பெறுவதற்காக பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னால், அங்குள்ளவர்கள் கூட்டமாக குவிந்தது தொடர்பான சில மொபைல் வீடியோ பரவி வந்தது. 

அதில், பாதுகாப்பு உடைகள் அணிந்த நபர் ஒருவர் கதவுகளுக்கு ஒரு புறம் இருந்து, பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசுகிறார். மற்றொரு புறம் இருப்பவர்கள் அதனை பிடிக்க கைகளை நீட்டிய படி நிற்கின்றனர். 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பலாம் என மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வருகிறது.