This Article is From May 18, 2020

லாக்டவுன் 4-ல் எவற்றுக்கெல்லாம் அனுமதி மற்றும் தடை!

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்குத் தடை.

இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

ஹைலைட்ஸ்

  • மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது
  • மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • 3வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
New Delhi:

நாடு முழுவதும் வரும் மே 31 ஆம் தேதி வரை, கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முழு முடக்க உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்படும் இந்த முழு முடக்க உத்தரவில், பல கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 

 புதிய கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, கொரோனா பாதித்த மண்டலங்களை பிரிவுகளாக பிரிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களை சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கன்டெயின்மென்ட் மண்டலங்களை வகைப்படுத்தும் உரிமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கன்டெயின்மென்ட் மண்டலங்களில் தொடர்ந்து 28 நாட்களுக்கு எந்தவித கொரோனா பாதிப்பும் இல்லையென்றால், அந்தப் பகுதி கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்படும். 

மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது 3வது முறையாக அது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எவற்றுக்கெல்லாம் அனுமதி:

-ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இரு மாநில அரசுகளின் அனுமதி பெற்று பயணிக்கலாம். கன்டெயின்மென்ட் மண்டலங்களில் இந்த விதிமுறை பொருந்தாது. 

-விளையாட்டு அரங்குகள் மற்றும் மைதானங்கள் திறக்கப்படலாம். ஆனால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

-ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சிவப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமற்றப் பொருட்களை டெலிவரி செய்யலாம். 

-கன்டெயின்மென்ட் மண்டலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி.

-உணவகங்கள் திறக்கப்படலாம். ஆனால் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி.

-மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் பயணம் செய்ய அனுமதி.

-அனைத்து வித சரக்கு வண்டிகளுக்கும் அனுமதி.

-திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

-இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

-அனைத்து தனியார் கடைகளும் திறக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இடையில் 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைக்குள் ஒரு சமயத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது.

-வீட்டிலிருந்தபடியே பணி செய்வது முடிந்த வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

எவற்றுக்கெல்லாம் தடை:

-மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்கும் விமானங்களைத் தவிர அனைத்துவித உள்ளூர் மற்றும் வெளியூர் விமான சேவைகளுக்குத் தடை.

-மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து.

-பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியிருக்க வேண்டும். 

-ரெஸ்டாரென்டுகள் மற்றும் பிற சேவை நிறுவனங்கள் மூடியிருக்க வேண்டும். பேருந்து டிப்போ, ரயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அவை இயங்கலாம்.

-சினிமா அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், தியேட்டர்கள், அரங்கங்கள், பொதுக் கூட்ட அறைகள் மற்றும் சம்பந்தமுடைய அனைத்து இடங்களும் மூடியிருக்க உத்தரவு.

-சமூக, அரசியல், மத, பொழுது போக்கு, கல்வி சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த எந்தவிதக் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. மதக் கூட்டங்களுக்கும் தடை.

-இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்குத் தடை.

-பொது இடங்களில் மது அருந்துதல், பான் மசாலா போடுதல், குட்கா போடுதல், சிகரெட் பிடித்தல் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது.

.