This Article is From May 09, 2020

H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா!

இந்த H-1B விசா மூலமாக தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலை செய்கின்றனர்.

H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 77 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Washington:

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் H-1B விசாக்கள் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. இந்த விசாவானது தொழில்நுட்ப ரீதியான திறமை வாய்ந்த தொழிலாளர்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தங்கி பணிபுரிய அனுமதியளிக்கின்றது. இந்நிலையில், இந்த H-1B விசா மூலமாக தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலை செய்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் குடிவரவு ஆலோசகர்கள், தற்போது அமல்படுத்தப்பட இருக்கும் திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்த திட்டங்கள் இம்மாதத்தில் அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, தற்காலிக மற்றும் புதிய வேலைக்கான விசாக்காளை தடைசெய்ய வழிவகுக்கிறது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் H-1B விசாக்கள் மட்டுமல்லாது, H-2B விசாக்கள், மாணவர்களுக்கான விசாக்கள் மற்றும் மாணவர்களோடு வருபவர்களுக்கான விசாக்களும் தடை செய்ய பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா, உயிரிழப்புகளை மட்டுமல்லாது, வேலையிழப்புகளையும் பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கிட்டதட்ட 33 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி ஆகியவை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என கணித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 10 முதல் 20 சதவிகிதம் வரை எதிர்மறையாக வளரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகளே கணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் நாட்டில் வேலையின்மை விகிதம் 14.7 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோசமான வீழ்ச்சியென புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க, எல்லைகளை தற்காலிகமாக மூடியும், குடியேற்றத்தினை தவிர்த்தும் வருகிறது. இந்த நேரத்தில் உள்நாட்டு கட்டுப்பாடுகளை விரிவுபடுத்திவருகிறது. இந்த நடவடிக்கைகளை இனி வரும் பல மாதங்கள் அல்லது ஒரு சில ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என பல அதிகார வட்டங்கள் கருதுவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதத்தில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் புதிய குடியேற்றங்களுக்கான 60 நாட்கள் தடை உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரச்சனை மற்றும் அதை கருத்தில் கொண்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் என்பது இன்னும் முழுமை பெறவில்லை என்றாலும், வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு, இந்நாட்டின் வேலையை மடைமாற்றுவதற்கான வாய்ப்பாக இந்த விசாகளுக்கான தடை திட்டம் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த விசகாகளுக்கான அனுமதியை நிறுத்தி வைப்பது என்பது நாட்டில் வேலையின்மை நிலைமை சரியாகும் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என குடியரசுக் கட்சி செனட்டர்கள் குழு ஒரு கடிதத்தில் அந்நாட்டு அதிபரை வலியுறுத்தியுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன.

.