This Article is From Apr 20, 2020

இன்று முதல் எவை இயங்கும்? எவை இயங்காது? முழு பட்டியல்!

சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது

இன்று முதல் எவை இயங்கும்? எவை இயங்காது? முழு பட்டியல்!

ஏப்ரல் 20 க்குப் பிறகு சில பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,000ஐ கடந்திருக்கக்கூடிய நிலையில், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்திருந்த முழு முடக்க நடவடிக்கையில் சில தளர்வுகள் ஏப்ரல் 20க்கு பிறகு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. அதாவது கொரோன பாதிப்பு இல்லாத, மிக குறைந்த அளவு கொரோனா தொற்று உள்ள மாவட்டங்களில் இந்த தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே தேசிய அளவில் பொருளாதாரம்  மோசமான நிலையிலிருந்து வந்த நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.

இது குறித்து அரசு முதலில் வெளியிட்ட அறிக்கையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும். சுகாதார சேவைகள் (ஆயுஷ் உட்பட) மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும். மீன்பிடித் தொழில் (கடல் மற்றும் இதர நீர் நிலைகள்) மற்றும் மீன் வளர்ப்புத் தொழில்களும் கால்நடை வளர்ப்புத் துறையைப் போலவே செயல்பட அனுமதிக்கப்படும். தேயிலை, காபி மற்றும் ரப்பர் போன்ற தோட்ட தொழில்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். தேங்காய், மூங்கில், பாக்கு மற்றும் கொக்கோ தோட்டங்கள் போன்ற பணப்பயிர்கள் அறுவடை மற்றும் அது சார்ந்த விவசாயப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். இதனுடன் சேர்த்து பழங்குடியினரின் வழக்கமான உற்பத்தியும் அனுமதிக்கப்படும் என மத்திய அரசின் திருத்தப்பட்ட பட்டியல் கூறியுள்ளது.

கிராமப்புறங்களில், நீர் வழங்கல்,சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள், மின் இணைப்புகள், தொலைத் தொடர்பு ஆப்டிகல் ஃபைபர்கள் மற்றும் கேபிள்களை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற் குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் அதிகமான காலகட்டங்களில் சிறு குறு தொழில்களும் அதனை நம்பி இருக்கக்கூடிய விளம்பு நிலை மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக இழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த தளர்வு நடவடிக்கைகள் மிகுந்த எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமையன்று ட்விட்டரில் வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் (அரசு மற்றும் தனியார் உட்பட ) போன்றவற்றிற்கான தளர்வுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 20 முதல் திறந்திருக்கும் பிற சேவைகள் பின்வருமாறு:

  • நிதித் துறையைப் பொறுத்தவரை வழக்கமான வேலை நேரப்படி வங்கிகள் திறந்திருக்கும், ஏடிஎம்கள் செயல்படும்.
  • சமூகத் துறையை பொருத்த அளவில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்குதல், மற்றும் சேவைகள், அங்கன்வாடி மையத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு வழங்கல் நடைமுறை போன்றவை தொடரும்.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் போதுமான முன்னெச்சரிக்கையோடு பணிகள் தொடங்கப்படும்.
  • மாநிலங்களுக்கிடையேயான சரக்கு போக்குவரத்து நடைபெறும்.
  • இணைய வழியாக கற்றல் மற்றும் தொலை துர கல்விகற்றலுக்கான நடவடிக்கைகள் தொடரும்.
  • அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மளிகை கடைகள் மற்றும் இணைய வழி விற்பனைகள் தொடங்கும்.
  • ஒளிபரப்பு, டி.டி.எச் மற்றும் கேபிள் சேவைகள் உள்ளிட்ட அச்சு மற்றும் மின்னணு ஊடக சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள்; கூரியர் சேவைகள்; மற்றும் ஹோட்டல்கள், தங்குமிடங்கள் போன்றவற்றிற்கும், அரசு கால் சென்டர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
  • கிராமப்புறங்களில் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடும் தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
  • சாலைகள், நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்துறை திட்டங்கள் போன்றவற்றிற்கான கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.
  • மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி அவசரக்கால தேவைக்கான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், கால்நடை பராமரிப்பு போன்ற தொழில்களை மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி என திருத்தப்பட்ட தளர்வுகள் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
.