This Article is From Jul 29, 2020

3 மாநிலங்களில் குறைந்த கொரோனா தொற்று; இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 50,000 கீழ் வந்தது!

கடந்த 5 நாட்களாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை விட, இந்தியாவில் தொற்றுப் பரவல் விகிதமானது மிக அதிகமாக உள்ளது. 

ஹைலைட்ஸ்

  • இந்தியாவிலேயே மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • உலகளவில் இந்தியா, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 3வது நாடு
  • அமெரிக்கா, பிரேசில் இந்தியாவுக்கு முன்னர் உள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் 3 மாநிலங்களில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த காரணத்தினால் இந்திய அளவிலான பாதிப்பு எண்ணிக்கையானது 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது, 50,000க்கும் அதிகமாகவே இருந்தது. 

டெல்லியில் நேற்று ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பை விட இன்று 40 சதவீத பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. அங்கு நேற்று 1,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்றோ, 613 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அதேபோல ஆந்திராவில் நேற்றைவிட இன்று 20 சதவீத பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. நேற்று அங்கு 7,627 பேருக்கு பாதிப்பு ஏற்பட, இன்றோ 6,051 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது. 

மேலும் மகாராஷ்டிராவில் 16 சதவீத பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று 9,431 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 7,924 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இன்று இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,703 ஆக உள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.83 லட்சத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 654 பேர் தேசிய அளவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 3.33 ஆக இருந்தது என்றும், அது தற்போது 2.25 விகிதமாக குறைந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம்தான் இந்த இறப்பு விகிதமானது குறைவாக இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. 

கடந்த 5 நாட்களாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தொற்றுப் பரவல் விகிதமானது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை விட, இந்தியாவில் தொற்றுப் பரவல் விகிதமானது மிக அதிகமாக உள்ளது. 

கடந்த 7 நாட்களில் அமெரிக்காவில் தொற்றுப் பரவல் விகிதமானது 1.7 சதவீதமாகவும், பிரேசில் நாட்டில் 2.4 சதவீதமாகவும் இருந்த நிலையில், இந்தியாவில் 3.6 சதவீதமாக உள்ளது. 

இந்த வேகமான பரவல் விகிதம் குறைக்கப்படவில்லை என்றால், இரண்டே மாதத்தில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகள் கொண்ட நாடாக உருவெடுக்கும் இந்தியா. 

.