இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டதா கொரோனா? - WHO என்ன சொல்கிறது..?

Coronavirus: கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறும்போது, நோய் பாதிக்கப்பட்டவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாது.

இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டதா கொரோனா? - WHO என்ன சொல்கிறது..?

Coronavirus: ‘நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 400 மாவட்டங்களுக்கு கொரோனா பரவவில்லை. 133 மாவட்டங்கள்தான் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன’

ஹைலைட்ஸ்

  • இந்திய அளவில் 6,412 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • இதுவரை நாட்டில் 199 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்
  • தற்போது நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது
New Delhi:

உலக சுகாதார அமைப்பான WHO, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது, சமூகப் பரவலாக மாறிவிட்டது என்று தனது அறிக்கையில் (Situation Report) குறிப்பிட்டிருந்தது. தற்போது NDTV-யிடம், அந்த அறிக்கையில் பிழை இருந்ததாகவும், இந்தியாவில் ஆங்காங்கே கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளனவே தவிர, சமூகப் பரவல் பாதிப்பு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா ‘சமூகப் பரவலாக' உள்ளது எனவும், சீனாவில் ‘ஆங்காங்கே' தொற்று உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் உலகளவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

இந்தியாவைப் பொறுத்தவரை 6,412 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று உறுதியாகச் சொல்லி வருகிறது இந்திய அரசு. 

கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறும்போது, நோய் பாதிக்கப்பட்டவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாது. இந்த நிலையில், அதிக பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும். 

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் நரேந்திர மோடி, அமல் செய்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால், வைரஸ் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 400 மாவட்டங்களுக்கு கொரோனா பரவவில்லை. 133 மாவட்டங்கள்தான் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன,' என்று கூறியுள்ளார். 

கொரோனா பரவலில் மொத்தம் 4 கட்டங்கள் உள்ளன. உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள் இல்லை, ஒன்றிரண்டு உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள், ஆங்காங்கே வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் சமூகப் பரவல். 

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், லாவ் அகர்வால், “நாட்டில் கொரோனா வைரஸால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 சதவிகிதத்தினருக்கு தொற்று எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் மட்டும்தான், சமூகப் பரவல் வந்துவிட்டது என்று அர்த்தம். அந்த நிலை வரும்போது, அரசு அதை மறைக்காது,” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.