This Article is From Jan 22, 2019

சர்ச்சைக்குரிய ஓவிய கண்காட்சி : மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் ஓவியங்கள் இருந்ததாக கூறி பாஜக பிரச்னையை கிளப்பியது.

லயோலா கல்லூரிக்கு எதிராக பாஜக போலீசில் புகார் அளித்திருந்தது.

Chennai:

ஓவிய கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்து மதத்தை புண்படுத்தும்படி ஓவியங்கள் இருந்ததாக கூறி லயோலா கல்லூரி நிர்வாகம் மீது பாஜக போலீஸ் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் மன்னிப்பு கேட்டிருக்கிறது லயோலா நிர்வாகம். 

சென்னை லயோலா கல்லூரியில் நாட்டுப்புற கலைஞர்களின் கருத்துரிமைகளை நிலை நாட்ட கடந்த 6-ம்தேதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி ஓவிய கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதில் பாலியல் வன்முறை, சமூக பிரச்னை, வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

இவற்றில் சில இந்து மதத்தை புண்படுத்தும்படி இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த பிரச்னையை பெரிதாக்கிய பாஜக லயோலா கல்லூரி நிர்வாகம் மீது போலீஸ் புகாரையும் அளித்தது. இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய ஓவியங்களை காட்சிக்கு வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ''கவனக்குறைவாக இருந்ததை ஒப்புக்கொள்கிறோம். இந்த ஓவியங்கள் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வீதி விருது விழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சியை ஜனவரி 19,20 ஆகிய தேதிகளில் நடத்தினோம். இந்த நிகழ்ச்சி சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்டு சில மத அமைப்புகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிக்கு எதிரான ஓவியங்கள் வைக்கப்பட்டு விட்டன. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது. 

.