This Article is From Jul 17, 2020

முக்கிய புள்ளிக்கு ‘அறிவுரை’ கேட்டு போன் செய்த சச்சின் பைலட்… வாய்விட்டு சிரித்த காங் நிர்வாகி..!

காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்து வரும்போதும், அவர் பிடி கொடுக்காமலேயே செயல்பட்டு வருகிறார்.

ராகுல் காந்தி, பைலட்டை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார் எனப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்விக்கு அழைபுப விடுத்துள்ளார் பைலட்
  • இரண்டு நாட்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடந்துள்ளது
  • இது குறித்து சிங்வி, வெளிப்படையாக பேசியுள்ளார்
New Delhi:

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் சொந்தக் கட்சியான காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சச்சின் பைலட். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மீது சினம் கொண்டு, தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் உஷ்ணமடைந்த காங்கிரஸ் கட்சி, அவரின் துணை முதல்வர் பதவியையும் மாநிலக் கட்சித் தலைவர் பதவியையும் பறித்தது. 

தொடர்ந்து காங்கிரஸ் தரப்பு, ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர் சச்சின் பைலட் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள். 

காங்கிரஸ் கட்சியின் இந்தக் குழப்பத்தினால், தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளார் பைலட். இந்நிலையில் அவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ப.சிதம்பரத்தை போன் மூலம் அழைத்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்து வரும்போதும், அவர் பிடி கொடுக்காமலேயே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ராகுல் காந்தி, பைலட்டை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார் எனப்படுகிறது. 

ப.சிதம்பரத்தைத் தவிர, பிரியங்கா காந்தி வத்ராவிடமும் சச்சின் பைலட் போன் மூலம் பேசியிருக்கிறார் என்று தகவல் சொல்லப்படுகிறது. அதேபோல காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வியிடமும், பைலட் போன் மூலம் அழைத்துப் பேசியுள்ளாராம். இதை சிங்வியே உறுதிபடுத்தியுள்ளார். தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து சட்ட ரீதியிலான அறிவுரை பெற சிங்வியை தொடர்பு கொண்டுள்ளார் பைலட். ஆனால் காங்கிரஸ் சார்பில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக சிங்விதான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் பைலட்டுக்கு, அறிவுரை கொடுக்க மறுத்துவிட்டார் சிங்வி. 

இது பற்றி அபிஷேக் மனு சிங்வி, “சச்சின் பைலட் என் உற்ற நண்பர். நான் மிகவும் மதிக்கும் நபர். மிகவும் வெள்ளந்தியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தார். என்னிடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை பற்றி அறிவுரை கேட்டார். அவரிடம் மிக மரியாதைக்குரிய வகையில், நான் எதிர்த் தரப்புக்கு வாதாட உள்ளேன். அதனால் இந்த விஷயத்தில் என்னால் எதவும் பேச முடியாது என்று கூறினேன். இதை சொன்ன பின்னர் இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம். அத்தோடு எங்கள் உரையாடல் முடிந்தது” என்று NDTV-யிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், “இப்படியான நட்பு நோக்கத்தில்தான் அவர் என்னை அழைத்தார். என்னை அவருக்கு வெகு நாட்களாகத் தெரியும். என் அறிவுரையை அவர் மதிப்பவர். அதனால்தான் போன் செய்தார்” என்றார். 

இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள மூத்த வழக்கறிஞர்களான ஹரிஷ் சால்வே மற்றும் முகுல் ரோகத்கி ஆகியோரை, தன் தரப்புக்காக வாதாட அணுகியுள்ளார் பைலட். இவர்கள் இருவரும் பாஜக அரசின் கீழ் உயர் பதவி பெற்றவர்கள். மத்திய அரசின் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் ரோகத்கி. இந்திய அரசு சார்பில் வெளிநாடுகளில் பல வழக்குகளை முன் நின்று நடத்துபவர் சால்வே. பாஜகவுக்கு நெருக்கமான அவர்களை பைலட், நாடியுள்ளதும் பல புருவங்களை உயர்த்தியுள்ளன. 
 

.