This Article is From Nov 10, 2018

மாயாவதி பிரதமர், நான் சத்தீஸ்கர் முதல்வர்!’- அஜித் ஜோகி பளீச்

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வரும் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது

ஹைலைட்ஸ்

  • மாயாவதி தான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர், ஜோகி
  • 2019-ல் 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு, ஜோகி
  • நான் சத்தீஸ்கரின் முதல்வராக பதவியேற்பேன், ஜோகி
Raipur/New Delhi:

சத்தீஸ்கரில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகி, ‘நான் சத்தீஸ்கரின் முதல்வராக பதவியேற்பேன். மாயாவதி, அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராவார்' என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘நான் இந்த முறை தனிக் கட்சி ஆரம்பித்து பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளேன். சத்தீஸ்கர் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று, என் தலைமையில் ஆட்சி அமைப்போம்' என்றார்.

அவர் மேலும், ‘காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3வது அணிக்கு, 2019 தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அப்போது கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பார் என்று முடிவு செய்யப்படும். ஆனால், என்னைப் பொறுத்தவரை உத்தர பிரதேசத்திற்கு 4 முறை முதல்வராக இருந்த தலித் பெண்ணான மாயாவதி தான், தலைமை ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

அஜித் ஜோகி, ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். 1986 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அவரை ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்து அனுப்பியது. 30 ஆண்டுகாலம் காங்கிரஸில் அங்கம் வகித்த ஜோகி, 2016 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் தனது சொந்தக் கட்சியை ஆரம்பித்து, இந்த முறை கூட்டணி அமைத்து சத்தீஸ்கர் தேர்தலில் போட்டியிடுகிறார். சத்தீஸ்கர், தனி மாநிலமாக பிரிக்கப்பட்டப் பின்னர் 2000 ஆம் ஆண்டு, முதல் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆனவர் அஜித் ஜோகி.

பாஜக, கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் இருக்கிறது. இந்த முறை காங்கிரஸுக்கு ஆட்சி பொறுப்பிற்கு வர வாய்ப்புள்ளது என்று நம்பப்பட்ட நிலையில், மாயாவதி, ஜோகியுடன் கூட்டணி வைத்து, மும்முனைப் போட்டியை உருவாக்கினார்.

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வரும் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

.