This Article is From Oct 25, 2018

மத்திய பிரதேச தேர்தல்: பழங்குடியின மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மும்முரம்

டாக்டர் ஹிராலால் அலாவா தலைமையில் ஜெய் ஆதிவாசி யுவ சக்தி கட்சி செயல்பட்டு வருகிறது. அக்கட்சியினர் 40 தொகுதிகளை காங்கிரசிடம் கேட்கின்றனர்.

மத்திய பிரதேச தேர்தல்: பழங்குடியின மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மும்முரம்

மேற்கு மத்திய பிரதேச பகுதியில் பழங்குடியின மக்களின் வாக்குகள் அதிகம் உள்ளன.

New Delhi:

மத்திய பிரதேச சட்ட சபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது அக்கட்சி பழங்குடியின மக்கள் கட்சியான ஜெய் ஆதிவாசி யுவ சக்தியுடன் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. 

பழங்குடியின மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹிராலால் அலாவா மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 40 தொகுதிகளை அளிக்குமாறு கேட்டு வருகிறார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணி பேசி வருகிறது. மல்வா நிமார் பகுதியில் 28 தொகுதிகளை கேட்டுள்ளோம். இவற்றில் 22 தொகுதிகள் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 22 தொகுதிகளில் காங்கிரஸ் 5-ல் மட்டும்தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே எங்கள் வலிமையை காண்பித்திருக்கிறோம். தார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர் என்றார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக டாக்டர் அலாவா பணியாற்றியுள்ளார். மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள அலிராஜ்பூர், ரத்ளம், ஜபவா, தார், கார்கோன், புர்ஹான்பூர், காந்த்வா, தேவாஸ் மற்றும் பர்வானி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்த பழங்குடியின மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு கேட்டதில், அவர்கள் பழங்குடியின மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 47 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த 47 தொகுதிகளில் பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

காங்கிரசும் ஜெய் ஆதிவாசி யுவ சக்தியும் கூட்டணி அமைத்தால் குஜராத்தில் ஏற்பட்டது போன்றதொரு நிலைமை ஏற்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதிதாக தொடங்கப்பட்ட பாரதிய பழங்குடியின கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி பழங்குடியின மக்களுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 27-ல் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நவம்பர் 28-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. 
 

.