This Article is From May 27, 2020

மகாராஷ்டிர கூட்டணி அரசு சிக்கல்: உத்தவ் தாக்கரேவை நேரடியாக சாடிய காங்கிரஸ் தலைவர்!

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான்.

மகாராஷ்டிர கூட்டணி அரசு சிக்கல்: உத்தவ் தாக்கரேவை நேரடியாக சாடிய காங்கிரஸ் தலைவர்!

கொரோனா நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிராவில் காங் - தே. காங் - சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது
  • இந்தக் கூட்டணி அரசு பதவியேற்று 6 மாதங்களே முடிந்துள்ளன
  • மகாராஷ்டிர அரசைக் கலைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது
Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி புரிந்து வரும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்குள் மோதல் வெடித்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், மாநில முதல்வரும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரேவை வெளிப்படையாக சாடியுள்ளார் காங்கிரஸின் முக்கியப் புள்ளி. 

காங்கிரஸ் கட்சியாலையே தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்தான் சஞ்சய் நிருபம். தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் சஞ்சய் பெயர் போனவர். இப்போது கூட்டணி அரசில் குழப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு காரணம் முதல்வர் உத்தவ் தாக்கரேதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

அவர், “மகாராஷ்டிர முதல்வர் மக்களிடம் தொடர்ந்து பேசுகிறார். அதைப் போன்று கூட்டணிக் கட்சிகளிடமும் அவர் பேசியிருந்தால் 60 நாட்களில் 60 முடிவுகளை மாற்றியிருக்கத் தேவையில்லை.

அவரது முடிவை தினந்தோறும் மாற்றிய வண்ணம் உள்ளார். பல நேரங்களில் காலம் கடந்தும் தவறான முடிவையே எடுக்கிறார். அதன் விளைவுதான், மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது,” என்று விமர்சித்துள்ளார். 

முன்னதாக ராகுல் காந்தி, “ஒரு விஷயம் பற்றி நான் தெளிவாக வகைப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் மகாராஷ்டிர அரசை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் அங்கு முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. நாங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளோம். ஒரு அரசை நடத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,” என்று மகாராஷ்டிராவில் நிலவும் கொரோனா பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ராகுல் காந்தி. 

அவர் மேலும், “மகாராஷ்டிரா மிக முக்கியமான மாநிலம். மும்பைதான் வர்த்தக தலைநகரமாக உள்ளது. எனவே, அங்கு கொரோனா பிரச்னையை சமாளிப்பது கடினமான விஷயம்தான். அங்குப் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசு அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்றார். ராகுலின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

தேசியவாத காங்கிரஸின் தலைவரான சரத் பவார், நேற்று மும்பையில் இருக்கும் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிர ஆளுநரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரண்டு சந்திப்புகளின் பின்னணியும் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா இடையிலான மோதல் போக்கின் வெளிப்பாடே என்று தகவல் ஒரு பக்கம் உலவிக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். இந்த நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக சரத் பவார், கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து முழு முடக்க நடவடிக்கையில் தளர்வு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை உத்தவ் தாக்கரே, இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

.