This Article is From Jun 16, 2020

லடாக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ராணுவ வீரர்கள்; சீனா அதிகாரப்பூர்வமாக சொல்வது இதுதான்!

அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியான்...

லடாக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ராணுவ வீரர்கள்; சீனா அதிகாரப்பூர்வமாக சொல்வது இதுதான்!

ராணுவ உள் வட்டாரத் தகவல், ‘தற்போதைய தாக்குதலில் இறந்தவர்கள் மீது தோட்டா பாய்ந்த அறிகுறி இல்லை. இது, கைகலப்பினால் ஏற்பட்ட மோதலால் நேர்ந்த உயிர் பலியாக இருக்கலாம்,’ என்கிறது. 

ஹைலைட்ஸ்

  • நேற்றிரவு இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது
  • இந்தியத் தரப்பில் 3 பேர் உயிரிழப்பு
  • சீனத் தரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது
New Delhi:

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்தியாவின் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் நிலைமையை கண்காணிக்க இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போது நிலவி வரும் பதற்ற சூழலைத் தணிக்க இரு நாட்டு ராணுவத் தரப்புகளும் பேசி வருவதாகவும் தெரிகிறது. இந்த திடீர் தாக்குதலால் இரு தரப்பிலும் உயிர்ச் சேர்தம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 

சீனத் தரப்பு, இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் எல்லைத் தாண்டி வந்ததாக குற்றம் சாட்டுகிறது. 

ராணுவ உள் வட்டாரத் தகவல், ‘தற்போதைய தாக்குதலில் இறந்தவர்கள் மீது தோட்டா பாய்ந்த அறிகுறி இல்லை. இது, கைகலப்பினால் ஏற்பட்ட மோதலால் நேர்ந்த உயிர் பலியாக இருக்கலாம்,' என்கிறது. 

இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியான், “சீனத் தரப்பை தாக்கியதனால், இந்திய - சீன எல்லையில் மிக வன்முறையான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சீனத் தரப்பு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. 

இந்த பதற்றமான சூழலில் இந்தியா பொறுப்புடன் நடந்து கொண்டு, தன் எல்லையில் உள்ள முன்னிலை துருப்புகளை கட்டுக்குள் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லையைத் தாண்ட வேண்டாம் என்றும், பிரச்னையை வரவழைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும், தான்தோன்றித் தனமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால் இரு நாட்டு எல்லைப் பிரச்னை பெரிதாகிவிடும்” என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 

லடாக்கின் கிழக்கு பகுதியான  பாங்கோங் த்சோ, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பேக் ஓல்டி போன்ற இடங்களில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர்.

சீன இராணுவ வீரர்கள், எல்லை கட்டுப்பாட்டை மீறி, இந்தியப் பகுதி மற்றும் பாங்கோங் த்சோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் அத்துமீறி நுழைந்தனர். இந்நிலையில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பிபி -15 மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றது. இந்தியத் தரப்பும், தனது சில துருப்புக்களையும் வாகனங்களையும் இந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெற்றது. இருப்பினும் உயரமான இடங்களில் இரு தரப்பு ராணுவங்களும் தங்களது துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாகவே தெரிகிறது. 

.