This Article is From Jun 02, 2020

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தம் ஊர்களுக்குச் செல்லும் வழியில் சாலை மற்றும் இரயில்பாதை விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

பொதுமுடக்கத்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது  முடக்கத்தின்போது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் வழியில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.  25 லட்சம் வழங்க  வேண்டும் என்று  மத்திய  அரசுக்கு எஸ்.டி.பி.ஐ.  கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக  அக்கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

ஊரடங்கு தொடங்கியது முதல் இதுவரை 378 புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவின் பாதிப்பில்லாமலேயே மடிந்துள்ளது அதிரச்சியை அளிக்கிறது. எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யாமல் மக்கள் போக்குவரத்தை தடைசெய்தது பேரழிவின் வீரியம் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தம் ஊர்களுக்குச் செல்லும் வழியில் சாலை மற்றும் இரயில்பாதை விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்தனர். பசிப்பட்டினி காரணமாக 47 பேரும், மருத்துவ வசதி கிடைக்கப்பெறாமல் 40 பேரும், காவல்துறை கொடுந்தாக்குதல் தாங்காமல் 12 பேரும், நெடுந்தூர கால்நடைப் பயணச்சோர்வு காரணமாக 26 பேரும், தற்கொலை செய்துகொண்டதால் 83 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் விபத்துக்களால் படுகாயமுற்று சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  அரசு அவர்களின் மருத்துவச் செலவுகளை முழவதுமாக ஏற்க முன்வரவேண்டும்.

கோவிட் பரவல் என்ற போர்வையில் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவே இது என்பதை புறந்தள்ளமுடியாது.  உரிய நேரத்தில் அரசு தலையிடாமல் அலட்சியப்படுத்தியதே இத்தனை விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தது என்பது வேதனைக்குரியது..இத்தகைய பேரழிவு ஏற்பட்டதற்கான பொறுப்பை மோடி அரசு தட்டிக்கழிக்க முடியாது.

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருந்த அவர்களின் குடும்பத்தாருக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குதோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவச் செலவுகளுக்காக போதுமான நிதியுதவியும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

.