This Article is From May 07, 2020

மத்திய அரசு தான் மதுக்கடைகளை திறக்கச் சொன்னது: ஜெயக்குமார் பளார்!

நாங்கள் முதலில் திறந்தோமா? மற்ற மாநிலங்களில் திறக்க ஆரம்பித்தார்கள். கர்நாடகாவில், ஆந்திராவில் திறந்தார்கள்.

மத்திய அரசு தான் மதுக்கடைகளை திறக்கச் சொன்னது: ஜெயக்குமார் பளார்!

மத்திய அரசு தான் மதுக்கடைகளை திறக்கச் சொன்னது: ஜெயக்குமார் பளார்!

மது தேவை இல்லை என்பதுதான் அதிமுக கொள்கை என்றும், மத்திய அரசு தான் மதுக்கடைகளை திறக்கச் சொன்னது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திருவிக நகர் மண்டலத்தில் உள்ள 15 வார்டுளிலும் கொரோனா தொற்று உள்ளது. நாளடைவில் பரவல் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு கிருமி நீக்க நடவடிக்கை, மருந்து வழங்குவது, உள்ளிட்ட பணிகளைச் செய்கிறோம். இந்தப் பகுதியில் வசிக்கும் துப்புரவுப் பணியாளர்களை பணிக்கே வரவேண்டாம் எனக் கூறி, அவர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறோம்.

இவ்வளவு பிரச்சினை உள்ள நேரத்தில் ஊரடங்கு தளர்வு என்பது நாம் அதை முற்றிலும் விலக்கிக் கொள்ளவில்லை. ஊரடங்கு உள்ளது. நாம் தன்னிச்சையாக எதையும் செயல்படுத்த முடியாது. உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு கொடுக்கிற வழிகாட்டுதல், மத்திய- மாநில பொது சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரை அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது மத்திய, மாநில சுகாதாரத்துறையின் பரிந்துரைதான். நாமாக எந்த நடவடிக்கையும் தனியாக எடுக்கவில்லை.

டாஸ்மாக் மது விற்பனையைப் பொறுத்தவரை எங்கள் கொள்கை மது தேவை இல்லை என்பதுதான். தேர்தல் அறிக்கையிலும் அதைத்தான் கூறினோம். மது ஒரு சமூகப் பிரச்சினை. மதுப் பிரச்சினைக்கு, மதுக் கடைகள் திறப்புக்கு அடிப்படைக் காரணமே திமுகதான். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான். அவர் அன்று மதுவிலக்கை ரத்து செய்தார். அன்று ராஜாஜி அவர் கையைப் பிடித்துக் கெஞ்சினார்.

அதன் பின்னர் எம்ஜிஆர் மதுவிலக்கைக் கடுமையாகக் கொண்டுவந்தார். ஆனால் கள்ளச்சாராயம் பெருகியது. மெத்தனால், எத்தனாலைக் குடித்து மக்கள் உயிரிழந்தார்கள். அதனால் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. படிப்படியாகக் கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்களாக மதுக்கடைகளைத் திறப்பதுபோல் உள்ளது. மத்திய அரசு திறக்கச் சொன்னது. அதிலும் நாங்கள் முதலில் திறந்தோமா? மற்ற மாநிலங்களில் திறக்க ஆரம்பித்தார்கள். கர்நாடகாவில், ஆந்திராவில் திறந்தார்கள்.

போலீஸார் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும்போது அண்டை மாநிலங்களிலிருந்து சாராயம் கடத்தப்படுவதும், அங்கு போய் குடிப்பதும், இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்தன. இதில் போலீஸார் உழைப்பு வீணாகும் நிலை ஏற்பட்டது. அதனால்தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

.