This Article is From Jul 18, 2018

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்… உயர் நீதிமன்றம் அதிரடி!

நீட் தேர்வில் இந்த முறை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்… உயர் நீதிமன்றம் அதிரடி!
Chennai:

நீட் தேர்வில் இந்த முறை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழில் கொடுக்கப்பட்ட நீட் தேர்வில் பல வினாக்களில் பிழை இருந்ததாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட போது தமிழிலும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அதில் 49 கேள்விகள் பிழையாக இருந்துள்ளது. இதனால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘கேள்விகளில் தவறு இருந்ததை கருத்தில் கொண்டு தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் மொத்தம் இருக்கும் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும். மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை 2 வாரத்தில் சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்பினால், நடக்க இருந்த மருத்துவ கவுன்சில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்தில் சிபிஎஸ்இ திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்ட பின்னர் தான் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு மூலம் 24,000 தமிழக மாணவர்கள் பயனடைவர் என்று யூகிக்கப்படுகிறது. இந்த முறை சென்ற ஆண்டை விட தமிழிக நீட் தேர்ச்சி குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பு மூலம் மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.